நடைபயிற்சி செய்தால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்!

கே.ஜி.மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு

கோவை கே.ஜி.மருத்துவமனை சார்பில் உலக இருதய நாள் விழிப்புணர்வு வாக்கத்தான் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

உலக இருதய நாள் வரும் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, இதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயிற்சி கே.ஜி. மருத்துவமனையில் துவங்கியது.

இதனை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் துவக்கி வைத்தார். இதில், மருத்துவ மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு நடைபயிற்சி கே.ஜி மருத்துவமனையில் துவங்கி 3 கி.மீ தூரம் வரை நடைபெற்றது. இதயத்தை காப்பது குறித்த கருத்துகளை அடங்கிய பதாகைகளை விழிப்புணர்வில் பங்கேற்றவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.

முன்னதாக டாக்டர் பக்தவத்சலம் மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக இருதய நாளை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் ஒருமணி நேரம் நடைபயிற்சி செய்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போதைய பழக்க வழக்கத்தால் 15 வயது முதலே மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

இடது கை, தோள் பட்டையில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை தவிர்த்தல் நல்லது. 19 வயது நபருக்கு கூட பைபாஸ் சர்ஜரி செய்யும் நிலை உள்ளது. உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய்களை கட்டுக்குள் கொண்டு வரலாம் என அவர் கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அசோக் பக்தவத்சலம், வசந்தி ரகு, இருதய சிகிச்சை நிபுணர்கள் அருண்குமார், நித்யன், கிருஷ்ணன், ராவ், சரவணன், பாலசுப்பிரமணியன், ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.