“புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!”

பி.எஸ்.ஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பிரகாசன் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பாலக்காடு ஐ.ஐ.டி இயக்குனர் சுனில்குமார் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பட்டமளிப்பு விழா உரையாற்றி அவர் பேசியதாவது: பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனது வாழ்த்தையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

பட்டம் பெற்ற உடன் உங்கள் கற்றல் நின்று விடவில்லை என்றும், அது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒன்று எனவும் கூறினார்.

தற்போது நீங்கள் கற்பதற்கான அனைத்து வடிவிலான புத்தக தொகுப்புகளும் எல்லா வடிவிலும் உங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் முன்பு அப்படி இல்லை, எளிதாக தரவுகள் கிடைத்து விடாது. இப்பொழுது எல்லா வகையான தரவுகளும் உங்களுக்கு எளிதில் கிடைத்து விடுகின்றன. அதனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தனது கருத்தினை தெரிவித்தார்.

பட்டம் பெற்று வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லும் நீங்கள் வேலை வாய்ப்பை வழங்குபவர்களாக இருங்கள். இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் அப்படி தான் இதுவரை இருந்துள்ளனர் என்ற எடுத்துக் காட்டையும் முன்வைத்து பேசினார்.

இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. முதலில் உங்களிடம் என்ன திறமை உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். அது தெரிந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அந்த திறமையை இன்னும் மெருகேற்றுங்கள். அது உங்களது வாழ்விற்கு உதவும்.

தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். புது விசயங்களை கற்றுக்கொண்டு புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு அறியுறுத்தினார்.

எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். உங்களுக்கான வாய்ப்பு எப்பொழுது வரும் என்பதை விழிப்புடன் கவனித்துக் கொண்டே இருங்கள்.

மேலும், சரியான நேரத்தில் ஒரு செயலை தொடங்க வேண்டும்.

நீங்கள் சரியான ஒரு விசயத்தை உறுதியாக நம்பினால் அதை செய்யுங்கள். ஆனால் அதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் அதை செய்ய முயலாதீர்கள்.

நீங்கள் விரும்பிய செயலை செய்யுங்கள். செய்யும் வேலையையும் பிடித்து செய்யுங்கள். கடின உழைப்பை கைவிடாதீர்கள் என எடுத்துரைத்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை, முதுகலையைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 348 பேர் பட்டங்களை பெற்றனர்.