ஹாட்ஸ்டாரில் வெப்சீரிஸாக உருவாகும் மகாபாரதம்

ஓ.டி.டி தளமான பிரபல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய புராணக் கதையான மகாபாரதத்தைத் தொடராக எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

லட்சியம், உடன்பிறப்பு போட்டி, மரியாதை, அன்பு, வஞ்சகம் மற்றும் சிலிர்ப்பூட்டும் போர் ஆகிய கருப்பொருள்களைக் கொண்ட மகாபாரதம் 2013 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இந்த தொடரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு வலைத் தொடராக உருவாக்கும் தனது திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற டிஸ்னியின் டி23 எக்ஸ்போவில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் தலைவர் கவுரவ் பானர்ஜி இந்த தகவலை தெரிவித்தார்.

இந்திப் பட தயாரிப்பாளரான மது மந்தேனா மற்றும் அல்லு என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து இந்த தொடரை டிஸ்னி தயாரிக்கிறது.

கவுரவ் பானர்ஜி இதுகுறித்து கூறும்போது, இது பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் எனவும், , உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்த இதிகாசக் கதையை அடுத்த ஆண்டு கொண்டு வருவது பாக்கியமாக இருக்கும் எனவும் கூறினார்.

இதை பெரிய அளவிலான, வெப் பிரத்தியேக தொடராக உருவாக்க விரும்புகிறோம். மேலும் இந்த தொடரை உருவாக்க எங்களிடம் ஒரு சிறந்த படைப்பாற்றல் குழு உள்ளது என்றார்.

மகாபாரதம் பழமையானது என்றாலும், இன்றும் வாழ்வியலுக்கு ஏற்ற பல கருத்துகள் அதில் இருக்கிறது. அதைத் தயாரிப்பதில் டிஸ்னி பெருமை கொள்கிறது என தயாரிப்பாளர் மது மந்தேனா தெரிவித்தார்.

மகாபாரதம் தவிர டி23 எக்ஸ்போவில் டிஸ்னி தயாரிக்க இருக்கும் பிற 2 தொடர்களின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் காஃபி வித் கரனின் எட்டாவது சீசனும், ஷோடைம் என்ற தலைப்பில் ஒரு வெப் தொடரும் இடம் பெற்றுள்ளது.