வேளாண் பல்கலையுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய தீர்வுகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உறுதுணை கொண்டு, கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் மூலம், முன்கணிப்பு அடிப்படையில் பெரிய பயிர் நோயைக் கண்டறிய தரவு சேகரிப்பில் உதவி செய்து, அதற்கேற்றே தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிபுணர்கள் வழிகாட்டுதலின் பேரில், இரு நிறுவனங்களின் நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம், தாவர நோய் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து, விவசாயிகள் உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதிக மகசூலைப் பெற பல வழிகளில் உதவும். மேலும், விவசாயிகளுக்கு பயனர் நட்பு இடைமுகம் இருக்க செயலி ஒன்று உருவாக்கப்படும்.

இவ்விழாவில் வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் அலமேலு, கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ் கணிப்பொறியியல் துறை தலைவர் கிரேஸ் செல்வராணி மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.