FDF சார்பில் பவுண்டரிகளுக்கான சர்வதேச கண்காட்சி

கோவையில் பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் (FDF) சார்பில் இன்டர் பவுண்டரி, இன்டர்டைகாஸ்ட் கண்காட்சி வரும் செப்டம்பர் 15, 16, 17 ஆம் தேதி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது தெற்காசியாவிலேயே முதல்முறையாக பவுண்டரி மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் FDF துணை தலைவர் கிருஷ்ணா சாம்ராஜ் மற்றும் இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பழனிசாமி ஆகியோர் பேசியதாவது:

கோவையில் சுமார் 600 பவுண்டரிகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 15,000 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகின்றன. நாட்டில் தயாரிக்கப்படும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் அனைத்திலும் கோவையில் உள்ள பவுண்டரிகளில் செய்யப்படும் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைக் குறிப்பிட்டனர்.

தொழில் துறைகளின் காஸ்டிங் தேவைகள், வாகன உற்பத்தி, ஜவுளி, சுரங்கம், கட்டுமானம், இயந்திர கருவிகள், எண்ணெய் எரிவாயு, மின் உற்பத்தி, பம்புகள், மோட்டார்கள் போன்றவற்றிக்கு தேவைப்படும் பாகங்கள் ஆகியவை கோவை பவுண்டரிகளில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் 88% பவுண்டரிகளில் இரும்பு தொடர்பான பாகங்களும், 10 % பவுண்டரிகளில் எஃகு தொடர்பான பாகங்களும், மற்றவைகளில் இரும்பு அல்லாத பொருட்களும் தயார் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

பவுண்டரி தொழில்நுட்பங்கள் குறித்தும், அதன் உற்பத்தி மற்றும் தரத்தை பவுண்டரி தொழிலாளர்களிடம் அதிகரிக்கும் வகையில், தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பவுண்டரி மற்றும் அதுசார்ந்த உபகரணங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பவுண்டரி தொடர்பான அனைத்து உபகரணங்களும், பொருட்களும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சர்வதேச அளவில் இருந்து 180 முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகின்றன. அதில் 60 நிறுவனங்கள் கோவையிலிருந்து பங்கு பெறுகின்றன. மேலும் ஜெர்மனி, சைனா, செக்கோஸ்லேவியா, ஜப்பான் உள்ளிட்ட மேலை நாடுகளும் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சிக்கான வேலைகள் கடந்த ஒரு வருடமாகவே நடைபெற்று வந்ததாகவும் அவர்கள் பதிவிட்டனர்.

செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் 6 மணி வரையிலும், 17 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரையிலும் இந்த கண்காட்சி நடைபெறும் எனவும், மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவித்தனர். சுமார் 20,000 முதல் 25,000 பேர் இந்தக் கண்காட்சியினை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறினர்.

கண்காட்சியின துவக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா (ஐ.ஏ.எஸ்) கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக சக்தி குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (TIDCO) இயக்குனர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பவுண்டரிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும், இந்த தொழிலில் ஈடுபடும் கடைநிலை ஊழியர்களின் உற்பத்தி திறனையும், தரத்தையும், அறிவு பகிர்தலையும் மேபடுத்துவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்றனர்.

மேலும், இக்கண்காட்சியினை சார்ந்த தொழில் நுட்பம், வார்ப்படம் குறித்த செயல்முறை ஆகியவை அடங்கிய 32 டெக்னிக்கல் பேப்பர் கலந்தாய்வும் இதில் இடம்பெறுவதாக குறிப்பிட்டு பேசினர்.

இந்த கண்காட்சி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்பதால் அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.