மின் கட்டண உயர்வை குறைக்க தமிழக முதல்வருக்கு சைமா வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வினால் ஜவுளித் தொழிலில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதனால் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால், மின்சாரத்தை அதிகம் உபயோகிக்கும் ஜவுளித் தொழிலின் போட்டி எஸ்திரன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவில் 40 %அதிகமாக மின்சாரத்திற்கு செலவு செய்யும், நூற்பாலைகள் மற்றும் நெசவு ஆலைகள், திருத்தப்பட்ட மின் கட்டணத்தால் அவர்களின் போட்டியிடும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் நூல் உற்பத்திக்கு சராசரியாக 5 யூனிட் மின்சாரம் தேவைபடுவதால், ஜவுளித் தொழிலுக்கான தோரயமான நிகர கட்டண உயர்வு யூனிட்டுக்கு ரூ.1 ஆக இருப்பதால், நூல் விலை கிலோவுக்கு ரூ.5 வரை அதிகரிக்கும்.

இதன் காரணமாக நுாலை பயன்படுத்தும் துறைகளான விசைத்தறி, கைத்தறி, ஆடை மற்றும் படுக்கை விரிப்பு ஜவுளிகளின் போட்டித்திறனை பாதிக்கும். 25,000 கதிர்கள் கொண்ட நூற்பாலைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.2 கோடி வரை மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

நாட்டில் உள்ள சிறு, நடுத்தர வகையை சேர்ந்த நூற்பாலைகளில், 85 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. அவர்கள் பருத்தி நெருக்கடியால் 70 % உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், ஒரு கே.வி.ஏ.க்கு (கிலோ வோல்ட் ஆம்பியர்) ரூ.350லிருந்து ரூ.550 வரை டிமாண்ட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அசாதாரணமானது. பீக் ஹவர்ஸ் நேரத்தை 6 மணியிலிருந்து 8 மணி நேரமாக அதிகரித்திருப்பதும், பீக் ஹவர்ஸ் கட்டணங்கள் 20 முதல் 25 % அதிகரித்திருப்பது மிகவும் அதிகம் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜவுளித் தொழிலின் உலகளாவிய போட்டித்தன்மையை நிலைநிறுத்தவும், ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் அதிகரிப்பதைத் தவிர்க்கவும், டிமாண்ட் கட்டணம், வீலிங் கட்டணம், டிரான்ஸ்மிஷன் கட்டணம் ஆகியவற்றைக் குறைக்கவும். பீக் ஹவருக்கு இணையாக இரவு நேர சலுகையை அதிகரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

6 சதவீத உச்சவரம்புடன் கூடிய ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு என்பதை தவிர்த்து மாநிலத்தில் புதிய முதலீடுகள் வருவதை ஊக்குவித்து தமிழகத்தை புதிய முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.