“பொருளாதார அடிப்படையிலான 10 % இடஒதுக்கீடு கொடுமையானது”

– பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 2021 வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரனை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விசாரனைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

இதில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரத்தினசபாபதி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன ஷரத்துகளுக்கும் 1992ல் உறுதி செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1992ல் உறுதி செய்யப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில், இந்த 30 ஆண்டுகளில் இன்னும் சராசரியாக 15 சதவீத இட ஒதுக்கீட்டை கூட கொடுக்காமல் புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுமையானது என வேதனை தெரிவித்தார்.

எனவே மத்திய அரசின் இந்த EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து, அனைத்து சமுதாய ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு பெற சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக வரும் 16 ந் தேதி அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் துணைத் தலைவர் வெள்ளியங்கிரி உட்பட உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.