கோவை ரயில் நிலையம் செல்லும் 3 வது பாதையை சீரமைக்க கோரிக்கை

கோவை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ரயில்நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். வாகன நிறுத்தும் இடத்தில் வெளியூர்களுக்கு செல்வோர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் வாகன நிறுத்தத்தில் இட பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மல்டி லெவல் பார்கிங் அமைக்கப்பட்டது. ஆனாலும் அங்கு நெரிசல் குறைந்தபாடில்லை.

கோவை ரயில் நிலையத்திற்குள் சென்றுவர இரண்டு பாதைகள் உள்ளன. இதில் முதலாவதாக பிரதான வழி உள்ளது. மற்றொன்று ரயில் நிலையத்தின் பின்புறம் கூட் ஷெட் சாலையில் உள்ளது.

இவை இரண்டை தவிர ரயில் நிலையத்தின் பக்கவாட்டு பகுதியிலேயே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஒட்டி மூன்றாவது பாதை உள்ளது. தினசரி டிக்கெட் எடுக்க தேவைப்படாதவர்கள், சீசன் டிக்கெட் எடுத்து வைத்திருப்பவர்கள், மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் ரயில் நிலையம் செல்ல இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர்.

பரபரப்பு மிகுந்த கோவை ரயில் நிலையத்தின் முன்பக்க நுழைவு வாயிலுக்குள் நுழைந்து செல்வதைக் காட்டிலும், நெரிசல் இல்லாத அமைதியான இந்த பாதையை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

மேலும், வெளியூர்களில் இருந்து கோவைக்கு படிக்க வரும் மாணவர்கள் இந்த வழியாக சென்றால் சுலபமாக பேருந்து நிலையத்தை அடைந்துவிடலாம் என்பதற்காகவும் இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.

இந்த பாதையிலேயே பி.எஸ்.என்.எல் அலுவலகமும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கட்டிடங்களும் உள்ளன. ஆனால், இந்த பாதை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. தார் சாலை கூட அமைக்கப்படாமல், மழை காலங்களில் சேறும் சகதியுமாக உள்ள இந்த சாலையில் நடந்துசெல்வதே சிரமமான விஷயமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சாலையை மேம்படுத்தினால், பயணிகள் மற்றும் அங்குள்ள அலுவலகங்களுக்கு செல்வோர் சுலபமாக செல்வது மட்டுமல்லாது, மற்றொரு வாகன நிறுத்தும் இடமும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.