
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடக்கிறது. பகல், இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வாகனங்கள் 3 கி.மீ தூரம் வரை காத்திருந்து ஆத்துப்பாலத்தை கடக்க வேண்டியிருக்கிறது. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக்கையாகி விட்டது.
வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பாலப் பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் பாலங்கள், இரும்பு பொருட்கள், ஜல்லி, சிமெண்ட் கொட்ட இடம் இன்றி பணி நடத்துவோர் திணறுகின்றனர் மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடவசதியின்றி பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
பணி நடத்தும் போது வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் வாகனங்களை மாற்றுப்பாதையில் விட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், இரு பிரதான ரோட்டில் இருந்து அதிக வாகனங்கள் வந்து செல்கிறது. செல்வபுரம் பைபாஸ், புட்டுவிக்கி ரோட்டில் வாகனங்கள் சென்று வரலாம். ஆனால் இங்கே பெரும்பாலான வாகனங்கள் செல்லாமல் 3 கி.மீ தூரத்தை மிச்சமாக்க பல நிமிட நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நிலை இருந்திருக்கிறது.
கடும் நெரிசல் காரணமாக பகல் நேரத்தில் பணி நடத்த முடியவில்லை இரவு நேரத்திலும் வாகன நெரிசல் இருக்கிறது. எப்படி பாலத்தின் இறங்கு தளம் பணிகளை நடத்துவது என தெரியாமல் தவிக்கிறோம். வாகனங்களை மாற்றுப் பாதையில் விட்டால்தான் குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும் என்றனர்.