ராகுலின் பாதயாத்திரை கரையேற்றுமா காங்கிரசை?

மாலுமி இல்லாமல் மூழ்கும் கப்பலாக தத்தளிக்கும் காங்கிரசை, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கரையேற்றுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் என்னும் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இது அரசியல் சாராத பயணம் என்றும் மக்களிடம் உள்ள பயத்தையும், அச்சத்தையும் போக்கும் வகையிலான பயணம் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

யாத்திரை கைகொடுக்குமா?

மக்களவைத் தேர்தல் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதன் முதல் நகர்வாக யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல். இந்த யாத்திரை திட்டமிடலை பார்க்கும்போது கன்னியாக்குமரியில் தொடங்கி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தில்லி, பஞ்சாப், காஷ்மீர் வரை 150 மக்களவைத் தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இப்போது 5 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் ஜனவரியில் நிறைவடைகிறது.

ஆனால், டிசம்பர் மாதமே குஜராத், ஹிமாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இந்த யாத்திரையில் இரு மாநிலங்களும் சேர்க்கப்படவில்லை. அப்படியெனில் இந்த இரு மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி பிரசாரத்துக்கு செல்ல முடியாது என்பதே அர்த்தம். இது மறுபடியும், இம்மாநிலங்களில் எந்த வகையான எதிர்வினையை ஆற்றும் என தெரியவில்லை.

ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்று சொன்னாலும் அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கமானது என்பது தான் அதன் உள்அர்த்தம். 2004 முதல் தொடர்ந்து 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2014, 2024 மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆட்சியை இழந்து இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே ஆட்சி செய்கிறது. இந்த நிலையில் தான் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசத்தில் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் மட்டுமே காங்கிரசுக்கு இப்போது கூட்டணி கட்சிகள் உள்ளன.

இதுபோல மாநில கட்சிகளே கூட்டணிக்கு வர மறுக்கும் நிலையில், மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது தேசிய அளவில் காங்கிரஸ் மேலும் முன்னேற வேண்டுமெனில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி மோதல் இருக்கும் 185 தொகுதிகளில் ராகுல் காந்தி தீவிரமாக களம் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு இந்த யாத்திரை கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடி மோதல் உள்ள ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஷ்கர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்த மக்களவை, மாநிலத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் காங்கிரஸ் மீண்டும் எந்த அளவுக்கு உழைக்க வேண்டும் என்ற உண்மை தெரியவரும்.

பாஜக, காங்கிரஸ் போட்டி நிலவரம்:

2014, 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் மோடி, ராகுல் இடையிலான நேரடி போட்டி நிலவரம் 185 தொகுதிகளில் மோடிக்கு அதிக வெற்றி கிடைப்பது தெரியவரும்.  ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சத்திஷ்கர், ஜார்கண்ட், உத்தரகண்ட், ஹிமாச்சல், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தான் இந்த போட்டி உள்ளது. இதில் 170 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறுகிறது. அதேபோல, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி, பிஜுஜனாதள், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரினாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மோதும்போது பாஜக கணிசமான தொகுதிகளை பெறுகிறது. இதுவே தேசிய அளவில் பாஜகவை வலுவாக வைத்திருக்கிறது.

அதேவேளை மாநில தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் பாஜக வெற்றிபெற்றிருந்தாலும், பாஜக, காங்கிரஸ் இடைவெளி குறைவாகவே இருக்கிறது. உதாரணமாக, 2018 இல் நடந்த ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளையும், பாஜக 38.8 சதவீத வாக்குகளையும் பெற்றன. அதுவே, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 61 சதவீத வாக்குகளை பெற்று அனைத்து 25 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 34.6 சதவீத வாக்குகளுடன் தோல்வியை தழுவியது.

அதேபோல, மத்திய பிரதேசத்தில் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 40.9 சதவீதம் பெற்று வெற்றிபெற்றது. அதுவே பாஜக 41 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 58 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது. காங்கிரஸ் 34.5 சதவீத வாக்குகளைப்பெற்று முதல்வர் மகன் நகுல்நாத் மட்டுமே வெற்றிபெற்றார். பாஜக 28 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது.

சத்திஷ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 43 சதவீத வாக்குகளை பெற்று பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது காங்கிரஸ். பாஜக 33 சதவீத வாக்குகளுடன் படுதோல்வியையே சந்தித்திருந்தது. அதுவே மக்களவைத் தேர்தலில் பாஜக 50.7 சதவீத வாக்குகளைப்பெற்று மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. காங்கிரஸ் 41 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

ஹரியானா மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 58 சதவீத வாக்குகளை பெற்று அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் 28.4 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது. அதன்பிறகு நடந்த பேரவைத் தேர்தலில் பாஜக 36.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

காங்கிரசின் முகம் ராகுல் காந்தியா?

மக்களவைத் தேர்தல் என வரும்போது கட்சிகளை தாண்டி மோடிக்கு வாக்குகள் வருகின்றன. அதேபோல, தான் மகாராஷ்டிரம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களிலும் தொடர்கிறது. ஒருவேளை மக்களவைத் தேர்தல் முடிந்த பின் ஹரியானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் களத்தில் இறங்கி போராடியிருந்தால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருந்திருக்கும். அப்போது தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராகுல் காந்தி ஒதுங்கிவிட்டார்.

2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் சென்றது காங்கிரசுக்கு மிகப்பெரிய பாதகமாக மாறியது. இப்போதும் அக்டோபரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் வருகிற நேரத்தில் பாதயாத்திரையை ராகுல் காந்தி நடத்துகிறார். இதில் அவர் போட்டியிடுவாரா அல்லது அசோக் கெலோட் போன்ற மூத்த தலைவரை தலைவராக நிறுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒற்றுமை யாத்திரை என்பது காங்கிரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கா அல்லது 2024 இல் மோடியை வீழ்த்துவதற்கா என்பதில் பெரிய வித்தியாசம் உள்ளது. காரணம், தேசிய அளவில் காங்கிரசுக்கு கூட்டணி வாய்ப்பு என்பது தமிழகம், பீகார், மகாராஷ்டிரம், ஜார்கண்ட் மாநிலங்களில் மட்டுமே. இதில் ஜார்கண்டில் அங்கு ஆட்சி நடத்தும் ஜார்கண்ட் முக்தி மோர்சாவுக்கு காங்கிரஸ் ஆதரவு இருப்பதால் கூட்டணி தொடர்கிறது. மகாராஷ்டிரத்தில் சரத்பவார், காங்கிரசுக்கும் சேர்த்தே அரசியல் செய்கிறார். பீகாரை பொறுத்தவரை தேஜஸ்வி யாதவுக்கு அக்கூட்டணியில் பெரிய விருப்பம் இல்லை.

காங்கிரசை பொறுத்தவரை சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தி தான் கட்சியை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக உள்ளனர். வேறு யாரை தலைவராக வைத்தாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறி தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஒற்றுமை யாத்திரை என்பது காங்கிரஸ் முகம் ராகுல் காந்தி தான் என்பதை கட்டமைக்க உதவும். ஆனால், காங்கிரஸ் உடன் முரண்பட்டு நிற்கும் மற்ற கட்சிகளை சமாதானப்படுத்துமா அல்லது 185 தொகுதிகளில் காங்கிரசை   வலுப்படுத்துமா என்பது கேள்விக்குறி. இதற்கு விடை காணால் 2024 இல் மோடியை தோற்கடிப்பது கடினம்.

அரசியல்வாதிகளின் பாதயாத்திரைகள்: 

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நமக்கு நாமே பயணம் என்பது தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்காவிட்டாலும் திமுக என்றால் ஸ்டாலின் தான் என்பதை நிலைநிறுத்த உதவியது. அதேபோல, ராகுல் காந்திக்கு 2024 மக்களவைத் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் காங்கிரஸ் என்றால் ராகுல் தான் என்பது முடிவாகும்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 1983 இல் கன்னியாக்குமரி முதல் தில்லி வரை பாரத் யாத்திரை 6 மாதங்கள் 4,260 கி.மீ. தூரம் பயணம் செய்தார். அது ஜனதா கட்சியை உயிர்ப்புடன் வைக்க உதவியது. 1990 இல் அத்வானியின் ரத யாத்திரை குஜராத்தில் இருந்து அயோத்தி வரை, மேலும் பிகாரில் லாலு பிரசாத் ஆட்சியில் அத்வானியை கைது செய்தது தேசிய அரசியலில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கியது. அதன் பிறகு வடமாநிலங்களில் பாஜக வலுவாக வேரூன்றியது. 11 சதவீதத்தில் இருந்த பாஜக 20 சதவீதமாக உயர்ந்தது. அதுவே காங்கிரசுக்கு மாற்று பாஜக என்ற பிம்பத்தை உருவாக்கியது.

ராஜசேகர ரெட்டி, 60 நாள் 1,500 கி.மீ பயணத்தை அறிவித்தார். திடீரென சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கு தேசம் கட்சி ஊக்கம், உற்சாகத்துடன் இருந்தது. சந்திரபாபு நாயுடுவின் ஜன்மபூமி நிகழ்ச்சிகள், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றால் மீண்டும் தெலுங்கு தேசமே ஆட்சியை பிடிக்கும் என்ற தோற்றம் இருந்தது. ஆனால், ஹைதராபாத்தின் வளர்ச்சி ஆந்திர வளர்ச்சி அல்ல என்ற கோஷத்தை முன்னிறுத்தி விவசாய பகுதிகளில் ராஜசேகர் ரெட்டி நடத்திய பாதயாத்திரை என்பது கிராமப்புற வாக்குகளை ஒருங்கிணைத்து காங்கிரசை  ஆட்சியில் அமர்த்தியது.

2019 இல் ஜெகன்மோகன் ரெட்டி 341 நாள்களில், 3,648 கி.மீ. பாதயாத்திரை மேற்கொண்டார். இதுவே அதன்பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் ஆட்சிக்கு வர உதவியது. இதுவே வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே சந்திரபாபு நாயுடு வெற்றிபெற முடிந்தது.

இவ்வாறாக பாதயாத்திரைகள் அரசியல்வாதிகளுக்கு கைகொடுத்துள்ளது. ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடைபயணம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.