பெருமழை வெள்ளம்: பருவ நிலை காரணமா?

சென்ற மாதம்தான் கோவை நகரம் இரண்டு முறை மழை நீரில் சிக்கி தத்தளித்தது. வடகிழக்கு பருவமழை பொழிந்து சுமார் அரை மணி நேரம் தான் இருக்கும், நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இந்த வாரம் அந்த இடத்தை பெங்களூரு நகரம் பிடித்திருக்கிறது. அதையும் தாண்டிய பாதிப்புகள் என்று சொல்ல வேண்டும். பெங்களூரு, பெரு மழை வெள்ளத்தில் தவிக்கின்ற செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

பெங்களூரு மட்டுமல்லாது, வடக்கு கர்நாடகா பகுதிகளிலும் மழை, வெள்ளம் வந்திருக்கிறது. நகருக்கு உள்ளும் புறமும் இருக்கின்ற ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்து, தெருக்கள் எங்கும் மழை நீர் ஓடுகின்றது.

இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பாஷ் ஏரியா என்று சொல்லக்கூடிய பணக்கார குடியிருப்புகள் அமைந்த பகுதிகளிலும், வெள்ள நீர் புகுந்து இயற்கைக்கு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை என்று நிரூபித்திருக்கிறது. ஆங்காங்கே அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் சமாளித்துக் கொண்டு அருகில் உள்ள ஓட்டல்களில் அறைகள் எடுத்து தங்கும் அளவுக்கு அங்கே சிக்கல் உருவாகியிருக்கிறது. சொகுசு கார்கள் எல்லாம் வெள்ள நீரில் அலங்காரப் பொருட்களாக ஆங்காங்கே நிற்கின்றன. இது போக தாழ்வான பகுதிகளில் வழக்கம் போல வெள்ள நீர் புகுந்து என்ன பாதிப்புகளைச் செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது.

பெங்களூரு என்பது கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் மட்டுமல்ல; இந்தியாவில் பெரும் தொழில் வணிக நகரங்களில் ஒன்றும் கூட. அந்த நகரத்துக்காக, பல வகையிலும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் செயல்படும் பல பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன. கர்நாடக மாநிலம் மற்றும் இந்திய அளவில் பல நூறு கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை பெற்றுத் தரும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நகரமாகவும் இது திகழ்கிறது. அதன் காரணமாக இன்று தென் இந்தியாவில் ஒரு பெரும் நகரமாகவும் விரிவடைந்துகொண்டே போகும் நகரமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழையின் அளவு அதிகரித்து வெள்ள நீர் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கு மேகவெடிப்பு எனும் அறிவியல் வார்த்தை, பெரும் மழைக்கான காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதிப்பு தான் முக்கியமான காரணமாக கூறுகிறார்கள். ஒவ்வொரு நகரம் அல்லது பகுதிக்கும் ஒரு தாங்குதிறன் உண்டு. அதைத் தாண்டி மனிதர்கள் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் போது இது போல நிகழ்வுகள் தொடங்குவதாக கூறுகிறார்கள்.

பெங்களூரு என்றாலே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மரங்கள் அதிகமாக இருப்பது போல தோன்றினாலும் உண்மை அவ்வாறு இல்லை. நவீன தொழில் வளர்ச்சியின் அசுரப் பிடியில் சிக்கியிருக்கிறது பெங்களூர் நகரம். அதன் அறிகுறிகள் தான் அவ்வப்போது உயரும் வெப்பநிலை, அடிக்கடி வரும் மழை வெள்ளம் ஆகியவை ஆகும்.

இந்த நிகழ்வுக்கு முன்பும் இது போல மழை வெள்ளம் இருந்திருக்கலாம், இருந்திருக்கிறது. ஆனால் அது நடைபெறும் கால இடைவெளி மிகவும் குறைந்து போய் அடிக்கடி பெருமழை வெள்ளம் என்று பெங்களூரு நகரம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு நகரத்துக்கு மட்டுமல்ல, இதனைத் தொடர்ந்து இந்த  வாரம் ஹைதராபாத் நகரமும் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. வரும் வாரங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த மழைநீர் வெள்ளம் என்பது ஒரு வழக்கமான இயற்கையான நிகழ்வுதான் என்றாலும், அதனால் ஏற்படும் பொருளாதாரம் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு குறிப்பிட்ட நகரம் சார்ந்த நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது. அதன் மறைமுக விளைவுகளையும் பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சென்ற மாதம் 15 நாட்களுக்கு முன்பு வரை கோவையில் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற தக்காளி, கர்நாடகா மழைக்குப் பிறகு ரூபாய் 40 என விலை உயர்ந்ததோடு, தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதன் இன்னொரு பக்கமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லாம் மழை, வெள்ள பாதிப்பால் மீள முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். இந்த தக்காளி தொடங்கி இன்னும் எத்தனை எத்தனை உற்பத்தி பொருட்கள், எத்தனை எத்தனை ஊர்களுக்கும் இப்பகுதியில் இருந்து செல்ல வேண்டும்.

இவற்றையெல்லாம் பாதிக்கின்ற வகையில் இயற்கை நிகழ்வுகள் இருக்கும்பொழுது இயற்கையோடு இயைந்த தொழில் வணிக முறைகளை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.