இன்ஜினியரிங் படிக்கலாமா?

பொதுவாக டாக்டர், இன்ஜினியர் படிப்பு என்றால் ஒரு காலத்தில் நல்ல மதிப்பு இருந்தது. இன்றும் டாக்டர் படிப்பு என்ற மருத்துவக் கல்வியின் மதிப்பில் பெரிய அளவில் சேதாரமில்லை. ஆனால் பொறியியல் கல்வியின் நிலை அப்படி இல்லை. செய்கூலியும் அதிகம். சேதாரமும் அதிகம்.

ஆம், ஒரு பக்கம் மெரிட்டில் சேர்பவர்கள் போக மற்றவர்கள் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சுயநிதிக் கல்லூரியில் அட்மிஷன் பெறுவதற்கு தகுந்த நன்கொடை தரவேண்டியுள்ளது. இந்த கோட்டா கல்லூரிகளின் முறையற்ற செயல்பாடுகளால் பொறியியல் கல்வியின் மதிப்பு குறையத் தொடங்கியது.

போதுமான அரசுக்கல்லூரிகள் இல்லாத குறையைப் போக்கத்தான், திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த சுயநிதிக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் எவ்விதமான எண்ணிக்கையும், கட்டுப்பாடும் இல்லாமல் அவை ஆண்டுக்கு ஆண்டு புற்றீசல்போல பெருகத்தொடங்கின.

அத்துடன், பல கல்லூரிகளில் உட்கட்டமைப்பு, திறமையான ஆசிரியர்கள், வேலைக்கான வாய்ப்பு என்பன உள்ளிட்ட பல பற்றாக்குறைகள் வளரத் தொடங்கின.

இத்தனை மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வெளியே வந்தால் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதைக் குறித்து கணக்கிடவும்  யாரும் பெரிய அக்கறை கொள்ளவில்லை. இதன் விளைவு பல இன்ஜினியரிங் பட்டதாரிகள் இன்று வேலையில்லா பட்டதாரிகளாக வலம் வருகின்றனர்.

மற்ற படிப்புகளை படித்தவர்கள் போல அவர்களால் ஏதாவது ஒரு வேலைக்கும் போக முடியவில்லை. காரணம், அவர்கள் தலைக்குமேல் இருக்கும் இன்ஜினியர் என்ற ஒளிவட்டம் அவர்களைத்தடுக்கிறது. அதுபோக அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையைத்  திறமையாக கற்றுக்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதும் இன்னொரு காரணம்.

இந்த நிலையில் மறுபடியும் ஒரு பிளஸ் டூ தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. பலர் இன்ஜினியரிங் படிக்க திட்டமிட்டுக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டே ஒரு இலட்சத்துக்கும் மேலான இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாகிக் கிடந்ததால், இக்கல்வியின் எதிர்காலம் குறித்து ஒரு தெளிவான கருத்து இல்லாத நிலைதான் காணப்படுகிறது.

ஏன் இந்த குழப்ப நிலை?

முதலில் இன்ஜினியரிங் கல்வி என்றால் என்ன என்பதை மாணவர்களும், பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் காசு கொடுப்பவர் எல்லாம் கல்லூரியில் சேரலாம், பட்டமும்  வாங்கலாம். ஆனால் இன்ஜினியர் ஆக முடியாது. அதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கால்கள் இருப்பவர் எல்லாம் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் இறுதிவரை ஓடி பரிசு பெறுவதற்கு திறமை, முயற்சி, பயிற்சி ஆகியன அவசியம் தேவை. கிட்டத்தட்ட இன்ஜினியரிங் கல்வியும் அது போலத்தான். அதற்கான தகுதியும், முயற்சியும் செய்ய முடிந்தவர்கள் தாரளமாக சேர்ந்து படிக்கலாம்.

அதை விட்டு, விட்டு பக்கத்து வீட்டுப்பையனைப் போல நானும் இன்ஜினியரிங் படித்து விட்டு அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும், இன்ஜினியரிங் படித்தால் கல்யாண சந்தையில் நல்ல மார்க்கெட், இன்ஜினியரிங் படித்தால் ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டு, கல்லூரியில் சேருவது பல நேரங்களில் தப்பாகவே முடியும்.

பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் வேண்டும் என்பதற்காக அண்டா, குண்டா அடகு வைத்து பணத்தைக்கட்டி, குழந்தையை ஜெயிலில் அடைத்து படிக்க வைப்பது என்பது சில நேரங்களில் பொறியியல் கல்லூரியில் சீட் வாங்க உதவும். இன்னொரு வழி, தேவையான நன்கொடையைக் கொடுத்து சீட் பெறுவது. ஆனால் இந்த வழிமுறைகள் இன்ஜினியராக உதவாது.

மனப்பாடம் செய்து பாஸானவர்களும், பணம் கொடுத்து உள்ளே வந்தவர்களும் பெரிய அளவில் படித்து திறன் கொண்டவராக மாறுவது கடினம். சொந்தமாகப் புரிந்துகொண்டு படிக்க இயலாத அவர்கள் போட்டி மிகுந்த சூழலில் வேலைவாய்ப்பு பெறுவது கடினம். இவ்வாறுதான் இன்ஜினியரிங் படித்த வேலையில்லா பட்டதாரிகள் உருவாகிறார்கள். இதற்கு சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் தனிமரம் என்றும் தோப்பாகாது.

அடுத்ததாக, தற்போதைய சூழலில் இன்ஜினியரிங் என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கும் துறையாகவும் இல்லை. முன்பே அது மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்று சில பிரிவுகளாகத் தான் இருந்தது. இன்று அதன் ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவு படிப்புகள் தோன்றிவிட்டன. இதில் நமக்கு தகுதியுள்ள படிப்பில் சேரவேண்டும். ஆனால்,பெரும்பாலும் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு பிரிவில் சேர்ந்துவிட்டு சிரமப்படுவது தான் தற்போது நடக்கிறது.

இன்னொரு முக்கியமான அம்சம், வேலைவாய்ப்பு. இன்றுள்ள சூழலில் பொறியியல் கல்விக்கட்டணம் உள்பட கற்பதற்கான செலவுகள் மற்ற துறைகளைவிட அதிகம். பலர் வங்கிக்கடன் பெற்றும், சேமிப்புகளை செலவழித்தும் தான் படிக்க வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்வில் செட்டில் ஆவதற்கும், வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தவதற்கும் வேலைவாய்ப்பு மிக முக்கியம். ஆனால் இன்ஜினியரிங் படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது ஒரு குறைந்தபட்ச கியாரண்டி கூட இல்லை என்ற நிலைதான் உள்ளது. சில நேரங்களில் சாதாரண தொழிலாளர்களின் வருமானத்துக்கும் கீழான வருமானம் பெறும் சூழல் உருவாகிறது.

எடுத்துக்காட்டாக, கட்டு மானத் துறையில் மேஸ்திரியாக பணிபுரியும் படிக்காத அல்லது பள்ளிப்படிப்பு படித்த ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபாய் என்ற வகையில் மாதத்துக்கு இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்க இயலும். அவருக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கிறது.

ஆனால் நான்காண்டு இன்ஜ¤னியரிங் படித்து முடித்துவிட்டு, இரண்டாண்டு அனுபவம் கொண்ட ஒரு இன்ஜ¤னியர் இந்த சம்பளத்தை உடனே பெற முடியாது. வேலைவாய்ப்பும் இல்லை. போட்டியும் அதிகம். இதுதான் பொதுவான உண்மை நிலை.

ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் ஐ.டி. நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெறும் சம்பளம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்துவிட்டு யதார்த்தத்தை மறந்து விடக்கூடாது.

 

இன்ஜினியரிங் படித்தால் எல்லோருக்கும் இந்த நிலைதானா?

அப்படி இல்லை. முதலில் பொறியியல் பட்டம் என்ற சான்றிதழ் ஒரு சர்வரோக நிவாரணியல்ல என்பதை உணர வேண்டும். கனவுலகில் கணக்குப் போடாமல் நடைமுறையில் சிந்திக்க வேண்டும். வேலை தரும் ஒரு நிறுவனம் என்பது அதற்கு தேவையான தகுதியுள்ள பணியாளர்களைத்  தேர்ந்தெடுக்க நினைப்பதில் எவ்வித தவறும் இல்லை. அந்த தகுதிகளை ஒவ்வொரு பட்டதாரியும் வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறும் சான்றிதழ் போதாது.

அடிப்படையாக மாணவர்களிடம் சில திறமைகளை, தொழிலகங்கள் எதிர்பார்க்கின்றன. அவை என்ன என்பதைக் கண்டறிந்து கல்வியுடன் அதற்கும் வழிகாட்டும் கல்வி நிறுவனங்களும், அங்கு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு சந்தையில் வெற்றி பெறுகிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை. இந்த திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் எல்லோரும் வெற்றிபெற முடியும் என்பதை உணர வேண்டும்.

வேலை தரும் தொழில் நிறுவனங்கள் இன்ஜினியரிங் பாடத்தைத் தாண்டி, தகவல் தொழில்நுட்பத்தைகக் கையாளும் திறன், குழுவாக செயல்படும் திறன், தொடர்புக்கலை, முடிவெடுக்கும் திறன் போன்ற பல திறன்களை எதிர்பார்க்கின்றன.

இவற்றை வளர்த்துக் கொள்ள முடிந்தவர்கள், தாராளமாக இன்ஜினியரிங் படிக்கலாம். அவர்களுக்கு வெற்றியின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. மற்றவர்கள்  யோசிக்கவும், உண்மை நிலையை உணர்ந்து கொண்டு இறுதி முடிவு எடுப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

 

இவர்கள் பார்வையில்

 

R.ருத்ரமூர்த்தி, முதல்வர், பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக்கல்லூரி.

 

பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதுன்னு சொல்ல முடியாது. அது நாம எந்த கல்லூரியில் படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். சும்மா பாஸ் பண்ணினா போதும்னு யாரும் படிக்க கூடாது. படிக்கும் மாணவனை பொறுத்து இருக்கிறது, வேலை கிடைக்கும், கிடைக்காது என்பது. படிக்கிற ஆர்வம் மற்றும் தனித்திறமையை உருவாக்கிக் கொண்டு படித்தால் தான் வேலை கிடைக்கும்.

 

சி.ஆர்.சுவாமி நாதன், தலைவர், ராக்.

பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வாய்ப்புகள் நிறைய இருக்கு. கல்லூரிகள் தான் இப்ப சரி இல்லை. நல்ல உள்கட்டமைப்பு, நல்ல உபகரணங்கள் இல்லை. பொறியியல் படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கக்கூடாது. மாணவர்கள், பெற்றோர்களுக்காக தேர்ந்தெடுக்க கூடாது. மாணவனுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சேர்ந்து படித்தால் வெற்றி நிச்சயம்.

 

D.நந்தகுமார், முன்னாள் தலைவர், இந்திய தொழில்வர்த்தக சபை கோவை.

வேலை வாய்ப்புகள் குறைவு. காரணம், IT துறை முன்பு மாதிரி இல்லை. 100 பேருக்கு மட்டும் வேலை இருக்கு. 1000 பேர் காத்துக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கடின உழைப்புடன் முயற்சித்தால் வேலை கிடைக்கும்.

 

இயாகோகா சுப்பிரமணியம், முன்னாள் துணை தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை.

குறையாவன பொறியியல் கல்லூரிகள் இருக்க வேண்டும். நிறைவான படிப்பு இருக்கணும். நல்ல கல்லூரியில படிச்ச யாரும் வேலை வாய்ப்பு இல்லாம இல்ல. நல்ல உள்கட்டமைப்பு, நல்ல தொழில்துறை பயிற்சியில் இருந்து வந்தவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது. இப்ப இருக்கிற நிலைமையில, புற்றீசல் மாதிரி பொறியியல் கல்லூரிகள் அதிகமாகிக் கொண்டே இருகின்றது. கல்லூரிகள் என்பது கல்வி கொடுப்பதற்கு மட்டுமே. இப்ப இருக்கற கல்லூரிகள் வேலைகள் வாங்கித் தருகிறோம் என்று விளம்பரம் மட்டுமே செய்கின்றன. பெருமைக்காக பெற்றோர்கள் படிக்க வைக்க கூடாது. இந்தத் துறை படிப்பு மட்டும் இல்லை. மற்ற துறை படிப்புகளும் நமக்காக தான் செயல் பட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

ராபின்சன், Director, RVS Technical Campus.

இன்றைய காலகட்டத்தில் உள்ள மாணவர்கள் மிகத் தெளிவாக முடிவெடுக் கின்றனர். பொறியியல் படிப்பு பொறுத்த வரையில் எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. 550க்கும் மேற்ப்பட்ட பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். அதில் திறமையுள்ள மாணவன் மட்டுமே வேலை என்னும் வெற்றிக் கனியை பறிக்கிறான். ஆனால் இன்றைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்  விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது. நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.

கடந்த இரண்டு வருடங்களை விட, இந்த ஆண்டு சேர்க்கையின் சதவிகிதம் மிகவும் குறைவு. இதற்கு காரணம் போலியான நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாததே.

 

முரளிதரன், இயக்குநர், மக்கள் தொடர்பு, நேரு கல்வி குழுமம்.

பொறியியல் படிப்புக்கு எப்போதும் மதிப்புண்டு. மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் படித்தவர்களுக்கு உலகளாவிய அளவில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் கத்துக் கொண்டிருக்கின்றன.

அதைப் பற்றிய விழிப்புணர்வு நம் மாணவர்களிடம் இல்லை என்பதே உண்மை. காரணம் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். மாணவர்கள் பொறியியல் துறையில் எந்த பிரிவைச் சார்ந்து படித்தாலும், அதன் தொடர்பான மதிப்புக் கூட்டப்பட்ட படிப்புகள் படிக்க வேண்டும். இதை ஒரு சில கல்லூரிகள் மட்டுமே செய்து வருகின்றன.

 

அருண், பொறியியல் கல்லூரி மாணவன்.

நல்ல படிப்புதான். சிலர் கூறும் தப்பான கருத்துக்களை கேட்காதிர்கள். அவர்கள் தகுந்த முயற்சி எடுக்காதனால் குறை கூறுகின்றனர்.

 

பிரேம், பொறியியல் கல்லூரி மாணவன்.

தொழில் ரீதியாக பார்த்தல் இது சிறந்த படிப்பு. நுழைவுத் தேர்வு இருந்தால் திறமையான மாணவர்கள் ஊக்குவிக்கப் படுவார்கள். அப்படி படிக்கும் பொழுது அனைவருக்கும் வேலை கிடைக்கும்.

 

நவநீத பிரசாத், பொறியியல் படித்து முடித்தவர்.

பயனுள்ள படிப்பு என்று தான் சொல்லுவேன். ஆர்வத்துடன் முயற்சித்தால் வேலை நிச்சயம் கிடைக்கும்.

 

விஷ்வா, +2 மாணவர்.

சரியான பயிற்சி இருந்தால் எந்த படிப்பிலும் வெற்றி பெறலாம். விடா முயற்சியிருந்தால் வேலை வாங்கலாம்.