மின் கட்டணத்தை சேமிக்கும் ‘டெல்ஸ்மார்ட் ஐஓடி மீட்டர்’ கோவையில் அறிமுகம்

கோவையில் டெல்விங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வீடு, கடைகள், தொழில்துறை நிறுவனங்களின் மின்சார பயன்பாட்டை குறைத்து, மின் கட்டணத்தை சேமிக்கும் வகையில் டெல்ஸ்மார்ட் ஐஓடி மீட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிமுக நிகழ்ச்சி இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.வி குழும நிறுவனங்களின் தலைவர் ஏ.வி. வரதராஜன் மற்றும் இந்திய ஜவுளித் தொழில் மற்றும் ஜவுளித் துறை திறன் கவுனசில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் டெல்ஸ்ஸமார்ட் ஐஓடி மீட்டரை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கொடிசியா முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, கொடிசியா தலைவர் திருஞானம், டெல்விங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான சித்ரா, பிஎஸ்ஜி ஸ்டெப் செயல் இயக்குனர் சுரேஷ் குமார், மற்றும் என்.வி. குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் வெங்கடராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், டெல்விங் நிறுவன தலைமை செயல் அதிகாரி சித்ரா பேசுகையில்: மத்தியப் பிரதேச அரசு மின்சாரப் பயன்பாட்டில் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் அம்மாநில மின்சாரத்துறையால் நடத்தப்பட்ட “பவர்தான் 2022”-ல் எங்களின் டெலஸ்மார்ட் ஐஓடி மீட்டர் பயன்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

எங்களின் தயாரிப்பு தற்போதுள்ள தயாரிப்புகளிலிருந்து முற்றிலும்
வேறுபட்டது. ஏனெனில் இது மின்தேக்கியின் செயலிழப்பு மற்றும் உள்ளடக்கத்தை கண்காணிப்பதோடு,
அவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இதை தொலைதூரத்தில் இருந்து இணையதளம் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இந்த ஸ்மார்ட் மீட்டரை, வீடு, கடைகள் மற்றும் அனைத்து தொழில்துறை நிறுவனங்களில் பயன்படுத்துவதன் மூலம், தற்போதைய மின் நுகர்வு குறைக்கப்படும். இதனால் மின்சாரம் சேமிக்கப்பட்டு, மின் கட்டணமும் வெகுவாக குறையும்.

மேலும், மின் சாதனங்கள் வினியோக மின்மாற்றிகளில் இந்த மீட்டரை பயன்படுத்துவதன் மூலம், நாட்டிற்கு லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

‘ஒரிஜினல் திங்கிங்’ முக்கியம்

நிகழ்ச்சியில் ஏ.வி. வரதராஜன் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளைப் போல நம் நாடு இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. காரணம், அங்கு ஆராய்ச்சிகள் செய்து தியரியாக மட்டுமே வைத்துக் கொள்ளவில்லை, அதனை செயல்படுத்தினார்கள். அறிவியல் எப்பொழுது தொழில்நுட்பமாக மாறுகிறதோ, அப்போதுதான் ஒரு தயாரிப்பு உருவாகும்.

ஒரு பொருளின் கண்டுபிடிப்புக்கு உரிய முக்கியத்துவம் தரவேண்டும். பிறரின் கண்டுபிடிப்புகளை மட்டுமே ஆராய்ச்சி செய்து வருகிறோம், ஆனால் ஒரிஜினல் திங்கிங் என்பது முக்கியம். நம்மிடம் பல திறமையானவர்கள் உள்ளனர், அவர்களுக்கான ஊக்குவிப்பு இல்லாமல் உள்ளது. புதிய கோணத்தில் ஒரு செயலை அணுகுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஒரு கண்டுபிடிப்பிற்க்கான பலன் கிடைக்க வேண்டும் எனப் பேசினார்.