சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சுதந்திர தின விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்து உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு துறையினர் மேனாள் இணை இயக்குனர் திரு.கே.அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அக்னி, பிருத்வி, ஆகாஷ், திரிசூல் அணிகளை சேர்ந்த மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர், அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக குரல் கொடுத்து, தமது உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் தியாகம் செய்த வீர மறவர்களை நினைத்து போற்ற வேண்டிய நாள் இந்த திருநாளாகும் என கூறினார். வருங்கால வளமான இந்தியாவை உருவாக்குவதே நம் ஒவ்வொருவரின் இலட்சியம் என்று மாணவ மாணவியர் எண்ண வேண்டும் என பேசினார்.

விழாவில் சுதந்திர தினத்தையும், சுதந்திர போராட்டத் தியாகிகளையும் நினைவுகூர்கின்ற வகையில்,பள்ளியின் நேரு அஞ்சல்தலை மன்றம் சார்பில், சிறப்பு தபால் தலைகள் , விடுதலை போராட்ட வீரர்கள் தொடர்பான முதல் நாள் அஞ்சல் உறைகள், ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு விருந்தினர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பார்வையிட்டனர். இதில் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி, கல்வி ஆலோசகர் கணேசன், துணை முதல்வர் சக்திவேலு உள்ளிட்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.