இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சூரியஒளி மின் வாகன வடிவமைப்பு போட்டி

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவிலான சூரியஒளி தானியங்கி மின் வாகன வடிவமைப்பு போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது.

இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களால் வடிவமைக்கபட்ட 31 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறு விதமான ஸ்டாடிக் மற்றும் டயனமிக்ஸ் தேர்வு முறைகளில் பரிசோதிக்கப்பட்டு, கடைசியில் 12 வாகனங்கள் இறுதி சுற்றுக்காக தேர்வு செய்யப்பட்டது.

போட்டியின் நிறைவு நாளில், என்டுறன்ஸ் என்று அழைக்கப்படும் இறுதி வாகன ஓட்ட தேர்வினை, சிறப்பு விருந்தினர் யூனிவெர்சல் ஹீட் எக்ஸ்சேன்ஜ்ஜர்ஸ் தலைமை HR, சேது, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு ஆகியோர் முன்னிலையில் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

போட்டியில் 10 பிரிவுகளில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யவர்தினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ரொக்க பரிசுத்தொகை ரூபாய் 50,000 மற்றும் சுழற் கோப்பையை வென்றது.

மேலும் 8 பிரிவுகளில் வெற்றி பெற்ற கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாம் இடத்தை வென்று ரொக்க பரிசுத்தொகை ரூபாய் 20,000 மற்றும் கோப்பையை பெற்றது.
6 பிரிவுகளில் வெற்றி பெற்ற கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்து ரொக்க பரிசுத்தொகை ரூபாய் 16,000 மற்றும் கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியரை இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன், கல்லுரி முதல்வர் ஜெயா மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் சிவா, ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ராஸ்மேத்யூ வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.