நம் கட்டுப்பாடுகள் உடையட்டும்!

ஆதியோகி மனித சமூகத்தில் செய்த மாபெரும் புரட்சி என்ன என்பதை தனது பார்வையிலிருந்து பேசும் சத்குரு, மேற்கத்திய உலகில் சார்லஸ் டார்வினின் மனித பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார்.

சத்குரு:

ஒரு மனிதன் தன்னை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்னும் புது விதியை வகுத்தவர் ஆதியோகி. வெறும் கருத்தாக மட்டும் அதனை அவர் முன்வைக்கவில்லை, கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து முற்றிலும் புதிய மனிதனாய் ஒருவர் ஆவதற்கான வழிகளையும் அவர் நமக்கு வகுத்துக் கொடுத்தார். காடுகளுக்குள் சுற்றித்திரிந்த மனிதன் வளர்வதற்கு வழி அமைத்துக் கொடுத்தவர் அவர்தான்.

ஆதியோகியின் காலத்திலிருந்து இன்று வரை, யாரும் முக்தி எனும் கருத்தைப் போன்றதொரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டதில்லை.

இன்று நாம் கலாச்சாரம், நாகரிகம் என்று அழைப்பதெல்லாம் அவர் வித்திட்ட பாதையின் பலனே. இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தங்கள் எல்லைகளைக் கடந்து முக்தி அடைவதே வாழ்வின் நோக்கமாய் இருக்கிறது. இந்த தேசத்தின் கலாச்சாரமே முக்தியை நோக்கியதாய் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கலாச்சாரத்தில் நாம் செய்வதெல்லாம் முக்தியை நோக்கிய ஒரு பயணமாய் இருக்கிறது.

முக்தி – என்பது புரட்சிகரமான ஒரு கருத்து. ஆதியோகியின் காலத்திலிருந்து இன்று வரை, யாரும் முக்தி எனும் கருத்தைப் போன்றதொரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டதில்லை. நாம் சிக்குண்டிருக்கும் அடிமைத்தளைகளில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சாத்தியத்தை அவன் உருவாக்கிக் கொடுத்தான்.

ஒவ்வொரு மனிதனும் தான் கட்டுண்டிருக்கும் தடைகளைத் தாண்டி வளரமுடியும் என்று நமக்கு வழியமைத்துக் கொடுத்தவர் ஆதியோகி.

நான் ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அவர்கள் என்னிடம், “மேற்கத்திய உலகில் மனித விழிப்புணர்வை மேலெழுப்ப உழைத்ததில் சிறந்த மனிதர் யார்?” என கேட்டனர். நான், “சார்ல்ஸ் டார்வின்” என்றேன். “அது எப்படி டார்வின், அவர் வெறும் இயற்கையியலாளர் அல்லவா?” என்றார்கள். “ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய முடியும் எனும் கூற்றை முன்வைத்த ஒரே காரணத்திற்காக அவரை அப்படிச் சொல்லலாம். ஏனெனில், மனிதன் தான் இருக்கும் நிலையிலிருந்து வளரமுடியும் என்பதை மேற்கு உலகிற்கு சொன்னவர் அவர்தான்,” என்றேன்.

ஒரு எறும்பு எறும்பல்ல. அது மனிதனாய் மாறிக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கிறது. ஒரு புலி வெறும் புலியல்ல. அதுவும் மனிதனாய் மாறிக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு உயிரும் பரிணாம வளர்ச்சி அடைய முடியும் எனும் சாத்தியத்தை மேற்கு உலகிற்கு சொன்னவர் டார்வின். அதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் தான் கட்டுண்டிருக்கும் தடைகளைத் தாண்டி வளரமுடியும் என்று நமக்கு வழியமைத்துக் கொடுத்தவர் ஆதியோகி.