கைகொடுக்குமா இறுதி ஆட்டம்?

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தனர். இது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பு மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தொடர்கிறார். கடந்த ஜெயச்சந்திரன் தீர்ப்பு பாதகமாக அமைந்தது. இதனால் எடப்பாடி தரப்பினர் உற்சாகம் குறைந்து காணப்பட்டனர். இதன் வெளிப்பாடகவே உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாறினார்.

இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தொடர்கிறார். எப்படியும் இந்த தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எப்படியும் மேல்முறையீடு செய்யும். வழக்குகள் மாறி மாறி சென்றாலும் 2024 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு தான் இறுதியானது ஆகும்.

அப்போது தேர்தல் ஆணையம், சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்குகிறதா அல்லது முடக்குகிறதா என்பதே கேள்விக்குறி. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை 1997 ஜெயலலிதா, திருநாவுக்கரசு வழக்கின்படி சின்னத்தை முடக்கும் வாய்ப்பும் உள்ளது. இல்லையெனில் சாதிக் அலி மற்றும் அகிலேஷ் யாதவ் வழக்கின்படி அதிக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை கணக்குக்காட்டி எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலையை வழங்கும் வாய்ப்பும் உள்ளது.

பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்து தீர்ப்பு தனக்கு சாதகமாக பெறுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலருக்கான தேர்வை நடத்துகிறாரா என்பதை பார்க்க வேண்டும். தொண்டர்களால் தேர்வான பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வானால் அது அவருக்கு கூடுதல் பலமாக மாறும். பொதுச்செயலர் தேர்தலை பொறுத்தவரை அப்பதவிக்கு போட்டியிடக்கூடியவர் 5 ஆண்டுகள் கட்சியின் தலைமைக்கழக பொறுப்புகளில் இருந்திருக்க வேண்டும், 10 மாவட்டச் செயலர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச்செயலர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் என்பது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற மரபை மீறியது. எனவே, வாக்காளர்களாக இருப்பவர்கள் தான் முன்மொழியவும், வழிமொழியவும் முடியும். அதிமுக பொதுச்செயலர் தேர்தலை பொறுத்தவரை தொண்டர்களே வாக்காளர்களாக இருப்பதால் தொண்டர்களே முன்மொழிந்து, வழிமொழிய வேண்டும்.

தொண்டர்களை மாவட்டச் செயலர்கள், ஒன்றியச் செயலர்கள் என தரம் பிரித்து வழிமொழிய சொல்வது ஜனநாயகத்துக்கு முரணான செயல். இது வாக்காளர்களை தரம் பிரிக்கும் செயல் ஆகும். இதை கோடிட்டு யாராவது நீதிமன்றத்துக்கு சென்றால் பொதுச்செயலர் தேர்தலுக்கு தடை கிடைக்க நேரிடும். அவ்வாறு நடந்தால் எடப்பாடி பழனிசாமியால் தொண்டர்களால் தேர்வான பொதுச்செயலராக வர இயலாது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவர்களை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டா என்பது கேள்விக்குறிதான்.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என கணக்குப் போட்டிருந்தார். காரணம், அவ்வாறான அணி சேர்க்கை என்பது தமிழகத்தில் 6.7 சதவீத பலம் கொண்ட முக்குலத்தோர்களை ஒன்று திரட்டி நெருக்கடி கொடுக்கலாம் என எண்ணியிருந்தார்.

ஆனால், இப்போது பாதகமாக வந்துள்ள தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வத்தின் கணக்குக்கு முட்டுக்கட்டை போடுவது போல உள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என்பதும், மேல்முறையீடுக்கு பின் மாறலாம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும், தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை தில்லி பாஜக தலைமையால் தலையீடு செய்ய முடியும். பாஜக தலைமை எந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறது. இரட்டை இலையை கொடுக்க நினைக்கிறதா அல்லது முடக்க நினைக்கிறதா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு தில்லியிலும், சென்னையிலும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதேபோல, பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு பிரதமருடன் இணக்கமாக இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், ரவீந்திரநாத்குமாரை தற்போது வரை அதிமுக உறுப்பினராகவே மக்களவையில் தொடர அனுமதி அளித்துள்ளது மத்திய அரசின் ஆசி ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது என்ற தகவலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அரை இறுதி ஆட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இறுதி ஆட்டத்தில் யார் வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு தான் தீர்மானிக்கும்.

பெட்டிச் செய்தி

தேர்தல் ஆணையம் கையில் இறுதி முடிவு

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இப்போது வந்துள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் அளிப்பது போல உள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இறுதி முடிவு தேர்தல் ஆணையத்தில் தான் எடுக்க முடியும். அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சிவசேனா, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் உள்கட்சி பிரச்சனைகளிலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

இவை இரண்டுமே பாஜகவின கூட்டணி கட்சிகள் என்பது சுவாரசியமான விஷயம். ஆகையால் இரண்டு வழக்குகளிலும் தேர்தல் ஆணையம், பாஜக தலைமைக்கு எது லாபமோ அத்தகைய முடிவை தான் எடுக்கும். மேலும் இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் மாறவும் வாய்ப்பு உள்ளது என்றார் ரிஷி.