தமிழக ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம் – அமைச்சர் பெரியசாமி

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் கட்டமாக 10 நியாய விலைக் கடைகளை மாதிரி நியாய விலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளில் சமையல் எரிவாயுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 5 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை எவர்சில்வர் கொள்கலங்களில் வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருள்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதில் இரும்பு ஷெல்ஃபுகளில் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு என்றும் கூறினார்.