தமிழகத்தில் காங்கிரசுக்கு முழுமையான சுதந்திரம் இல்லை – கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான சுதந்திரம் இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க முடியவில்லை எனவும் கார்த்திக் சிதம்பரம், எம்.பி வேதனை தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொதுமக்களை நாடி செல்லும் புனித பயணம் வெற்றி பெறும். பொதுமக்களை சந்திக்கவும் இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றது தொடர்பான கேள்விக்கு, கட்சியை விட்டு யார் சென்றாலும் கட்சிக்கு பின்னடைவு தான் என பதிலளித்தார். காங்கிரஸ் கட்சி விசித்திரமான முறையில் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க முடியவில்லை எனவும் எதிர் கட்சியாகவும் செயல்பட முடியாது எனவும் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சாதாரண மக்களிடையே வரிச்சுமையை அதிகரித்துள்ளது. இன்றைய பிரதமரும் நிதியமைச்சரும் உள்ள வரை மக்கள் யாருக்கும் எதுவும் கிடைக்காது. பாஜகவிற்கு எதிரான கட்சிகள் மீது அமலாக்கத்துறை மற்றும் சி பி ஐ ஆகியவற்றை ஏவி விட்டு ஆட்களை இழுத்து வருகிறார்கள். தவறான வழியில் கட்சிகளை உடைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த உறுப்பினர்களே இருப்பதால் தங்களால் கேள்வி எழுப்ப முடிவதில்லை. இந்துத்துவா கொள்கை வேரூன்றி இருப்பதால், அதனை எதிர்த்து நாங்கள் வைக்கும் வாதம் இப்போதைக்கு எடுபடவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

அதானி உலக பணக்காரரகள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது பாஜகவின் சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த ஒன்றரை ஆண்டில் தமிழக முதலமைச்சர் சுறு சுறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும், எளிதில் அணுக கூடியவராகவும் செயல்படுகிறார் எனவும் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் விமான நிலையத்திற்கு வரவே அங்கு திரண்டிருந்த பாஜகவினர் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். அதே வேளையில் காங்கிரஸ் கட்சியினரும் எதிர் முழக்கங்களை எழுப்பியதால் இரு தரப்பினரிடையே முழக்க மோதல் உருவானதால் சில நிமிடங்கள் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.