திறமையும், அறிவும் இருந்தால் எந்த இடத்திலும் வாழலாம் – விஜய் டி.வி‌ புகழ் பழனி பேச்சு

காரமடை, டாக்டர்‌.ஆர்‌.வி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். கோவையைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் அன்பு சிவா வாழ்த்துரை வழங்கினார்.

விஜய் டி‌.வி.யின் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் பேராசிரியர் பழனி மற்றும் தொலைக்காட்சி சீரியல் நடிகை யோகதர்ஷினி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் பழனி பேசுகையில், அன்பு ஒன்றே அனைத்திற்கும் ஆதாரம். நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திக்கவும் தான். கடவுளின் மறு உருவம்தான் நம்மை பெற்றவர்கள் என்றும், பெற்றவர்களை மதிக்க வேண்டும் எனவும் கூறினார். தாய்மை ஒன்றே உலகத்தில் சிறந்தது எனப் பேசிய அவர், பெண்களை மதிக்கின்ற நாடு தான் முன்னேறும் என தெரிவித்தார். மாணவர்கள் முன்னேற்றம் ஒன்றே ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் என்பதையும் அவர் பதிவிட்டார்.

திறமையும், அறிவும் இருந்தால் எந்த இடத்திலும் வாழலாம். தேடித் தேடி படிக்கவும், உழைக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். எளிமையான ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மை நாமே வடிவமைத்துக் கொண்டு, எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று மாணவர்களுக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.