ஹேக்கத்தான் போட்டியில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சாதனை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்பது சமூகம், தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசாங்கம் ஆகியவற்றின் சில அழுத்தமான பிரச்சனைகளை தீர்க்க மாணவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின் நாடு தழுவிய முயற்சியாகும்.

ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஒடிசா, சிவகாசி, வாரணாசி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. பல்வேறு துறைகளில் இருந்து பல்வேறு யோசனை அறிக்கைகள் சுமார் 1500 மாணவர் குழுவுக்கு வழங்கப்பட்டன.

பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் சார்பாக கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் இயந்திரவியல் துறைகளை சேர்ந்த ஏழு அணிகள் மென்பொருள் பதிப்புக்கும், இரண்டு அணிகள் வன்பொருள் பதிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டது.

36 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஐந்து அணிகள் (4 மென்பொருள், 1 வன்பொருள்) வெற்றி பெற்று ஒவ்வொரு அணியும் தலா ஒரு லட்சம் ரொக்க பரிசு வென்றனர்.

இது அகில இந்திய அளவில் ஐஐடி மற்றும் என்ஐடி மற்றும் பிற முன்னணி நிறுவனங்களுடன் கல்லூரி மாணவர்கள் போட்டியிட்டு வென்றது, இம்மண்டலத்தில் மிகப்பெரிய சாதனை ஆகும். வெற்றிபெற்ற யோசனைகள், கருத்துக்கான ஆதாரம் (ப்ரூப் ஆப் கான்செப்ட்) ஆக உயரும். மேலும் இது மேலாண்மை மற்றும் நிறுவனங்களின் செல்வாக்குமிக்க ஆதரவுடன் வணிகமயமாக்கலுக்கான ஒரு புதுமையான தயாரிப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், ஆலோசனை வழங்கிய பேராசிரியர்கரையும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாரயணசுவாமி, கல்லூரி முதல்வர் அலமேலு, கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.