ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க கல்லூரிகளில் பயிற்சி – முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இணைய தளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். சர்வதேச தரத்திலான படிப்புகளை தமிழக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்த இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.

இதனை துவக்கி வைத்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது: இளைஞர்களை திறன் உடையவர்களாக மாற்றவே நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்வளம் இல்லை, வேலை கிடைக்கவில்லை என்ற நிலையை மாற்றுகின்ற நிலை அமைந்துள்ளது.

12 ஆம் வகுப்பு முடித்த பெரும்பாலனோர் மருத்துவம், பொறியியல் படிப்புகளை நோக்கியே செல்கின்றனர். வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் பிற துறை படிப்புகளை பற்றியும் மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். புதிய படிப்புகளையும் மாணவர்கள் அறிய இந்த இணையதளம் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் மாணவர்கள் புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பெரும் தடையாக உள்ளது. இதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுகின்றனர்.

மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றல் திறனை வளர்க்க அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஜெர்மன், ஜப்பானிய மொழி, பிரெஞ்சு மொழிகளும் கற்றுத்தரப்படும். ஆங்கில புத்தகங்களை வாசிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.