சிறப்பான சேவையாற்றிய மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது

இந்து தமிழ் திசை மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் சார்பில் சிறப்பான மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகளை வழங்கினார்.

இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் இணைந்து வழங்கிய ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா இரண்டாவது ஆண்டாக கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், சோபா லிமிடெட்டும் இணைந்து நடத்தின.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பான அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களை இந்தியன் மெடிக்கல் அசோசியேசன், தமிழ் மாநில பிரிவு தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் இணைந்து ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதினை ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது.

சென்ற ஆண்டு சென்னை, கோவை என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழா, இந்த ஆண்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை என நான்கு மண்டலங்களில் நடைபெறுகிறது.

கோவையில் நடைபெற்ற விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் ஐ.எம்.ஏ தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் பழனிசாமி, ஐ.எம்.ஏ மதிப்புறு மாநிலச் செயலாளர் டாக்டர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அறிமுகவுரையாற்றினர். இந்து தமிழ் திசை பொதுமேலாளர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கோயமுத்தூர், தர்மபுரி, கரூர், சேலம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், ’மருத்துவ நட்சத்திரம்’ விருதினைப் பெற்றனர்.