கோவில்பாளையத்தில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் – பேராசிரியர் ரவி தகவல்

கோவில்பாளையத்தில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம், கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் ரவி கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்துக்குட்பட்ட கோவில்பாளையம், சர்க்கார் சாமக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் கணேசன், தொழில்நுட்பவியலாளர் சரவணன், கல்வெட்டியல் முன்னாள் மாணவர்கள் பாலகிருஷ்ணன், மணிகண்டன், மேகலா, சி.ஐ.டி. தொழில்நுட்ப உதவியாளர் ஹரிஹரபுத்திரன் ஆகியோருடன் கடந்த 21 ஆம் தேதி மேற்பரப்பாய்வு நடத்தப்பட்டது.

திருநீற்றுமேடு, பூதிமேடு, நத்தமேடு என்றழைக்கப்படும் சாம்பல் மேட்டுப் பகுதியை மேற்பரப்பாய்வுக்கு உட்படுத்தியதில், இதற்கு முன்பு அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைக்காத, வரலாற்றுக் கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், கருப்பு – சிவப்பு மட்கல ஓடுகள், அவற்றின் சிதைந்த பகுதிகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுகிறது. சாம்பல்மேடு என்பது கால்நடைகளைத் தொழிலாகக் கொண்டு பழங்கால நாடோடி மக்கள் வாழ்ந்து வந்ததற்கான இடமாகக் கருதப்படுகிறது.

அருகில் உள்ள காலகாலேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் கொங்கு சோழர், கொங்கு பாண்டியர்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததை உறுதிப்படுத்துகின்றன. கலிமூர்க்க விக்கிரம சோழனுடைய கல்வெட்டு ஒன்றை காலிங்கராயன் குளக்கரையில் (கோவில்பாளையம்) அண்மையில் கண்டுபிடித்தோம். அக்கல்வெட்டு இப்பகுதியைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வட கொங்கு பகுதியை ஆட்சி செய்த ஒரே கொங்கு சோழன் அவர் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.

ஆய்வில் கிடைத்த பொருள்களின் மூலம் இப்பகுதி மக்கள், மட்கலத் தொழில், சங்கு வளையல் செய்யும் தொழில், இரும்புக் கருவிகளை உருவாக்கும் தொழில்களில் வளம் பெற்றவர்களாக விளங்கி இருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

புதிய கற்கால மக்களும், அதனை அடுத்து நாடோடி இனக் குழு மக்களும் சங்க காலம், அதற்குப் பிற்பட்ட இடைக்கால மக்களும் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருப்பதன் மூலம் கோவில்பாளையம் சாம்பல் மேட்டுப்பகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

இதனை அரசு அகழாய்வு செய்யுமேயானால் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. தொடர்ச்சியாக சுமார் 50 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை உடைய கோவில்பாளையத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றாா்.