“1 ரூபாய் கூட மூலதனம் இல்லாமல் தொழில் முனைவோர் ஆகலாம்”!

அடிப்படையில் ஒரு ரூபாய் கூட மூலதனம் இல்லாமல் தொழில் செய்து தொழில் முனைவோர் ஆக முடியும் என்றும், இதற்காக எத்தனையோ பயிற்சி வகுப்புகள் செயல்படுகின்றன என டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு அமைப்பின் துவக்க விழாவின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜாலி வினிஷீபா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

கோவையைச் சேர்ந்த பெண்களுக்கான தொழில் துறை வலைபின்னல் அமைப்பின் நிறுவனர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் நவீன் மாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எத்தனையோ தொழில் துறைகள் சிறந்து விளங்குகின்றன. அடிப்படையில் ஒரு ரூபாய் கூட மூலதனம் இல்லாமல் நம்மால் தொழில் செய்து தொழில் முனைவோர் ஆக முடியும். இதற்கான பயிற்சி பெறுவதற்கு எத்தனையோ பயிற்சி வகுப்புகள் செயல்படுகின்றன. இந்த வகுப்புகளில் பயின்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் செய்து பணம் சம்பாதிக்க முடியும். முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி குறை கூறாமல் நம்முடைய குற்றங்களை களைய வேண்டும்.

எதைத் தவிர்க்கலாம், எதை தவிர்க்கக் கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களும் தொழில் முனைவோர் ஆவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தொழில் தொடங்குவதற்கு நிதி வழங்கும் அமைப்புகள் நிறைய உள்ளன. இதனை பயன்படுத்திக் கொண்டு நாம் தொழில் முனைவோர் ஆகலாம் என்று மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.