எதிர்காலத்தில் தொழில்துறைக்கு ரோபோடிக்ஸ் விஞ்ஞானம் அவசியம்

– கே.வி. கார்த்திக், தலைவர், கோ இண்டியா

கோயம்புத்தூர் தொழில் உட்கட்டமைப்பு சங்கத்தின் (கோயிண்டியா) 18 வது வருடாந்திர பொதுகுழுக் கூட்டம் நடைபெற்றது.

டெக்கான் இண்டஸ்ட்ரியின் நிர்வாக இயக்குனர் கே.வி. கார்த்திக் கோயிண்டியா தலைவராகவும், ஸ்ரீ ஜெயராம் பவுண்டரியின் நிர்வாக பங்குதாரர் சிவசண்முககுமார் மற்றும் அக்குவாசப் நிறுவனத்தின் விற்பனைக்குழு தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கோயிண்டியாவின் துணைத் தலைவர்களாகவும் பொறுப்பேற்றனர்.

கோயிண்டியா, கோவையிலுள்ள பம்ப், மோட்டார், பவுண்டரி மற்றும் மென் பொறியியல் இன்ஜினியரிங் துறைகளை சார்ந்த சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்களின் கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாடுகளை செயல்படுத்தும் சிறப்பு நோக்கத்திற்காக கோவையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.

புதிய தலைவர் கார்த்திக் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில், இனிவரும் காலங்களில் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் ரோபோடிக்ஸ் விஞ்ஞானத்தை சார்ந்து பல மாற்றங்களை காண வேண்டியிருக்கும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் விஞ்ஞானங்கள் ஒருங்கிணைந்த உலகில் வாழவிருக்கிறோம். வரும் காலங்களில், ரோபோடிக்ஸ் மனித வாழ்வில் நிரந்தரமாகி, அவை இல்லாது மனிதகுலம் வாழ முடியாத சூழ்நிலை உருவாகவுள்ளது.

தொழிற்துறையின் அனைத்து துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் ரோபோட்டுகளை தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். வரும் நாட்களில், உலகரங்கில் போட்டி மற்றும் தொடர் சந்தையை தக்க வைக்க, ரோபோடிக்ஸ் விஞ்ஞானத்தை நமது நாடும் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த எதிர்கால தேவை அறிந்து, ரோபோடிக்சை பயன்படுத்த விரும்பும் பல நிறுவனங்கள், விருப்பம் இருந்தும் அதற்கு தேவையான நிதி, வசதிகள் மற்றும் ரோபோடிக்சில் பயிற்சி பெற்ற திறன்மிகுந்த மனித வளம் இல்லாத காரணத்தால், ரோபோடிக்ஸ் விஞ்ஞானத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இச்சூழலில், கோயிண்டியா, ரோபோடிக்ஸ் விஞ்ஞானத்தின் எதிர்கால தேவை அறிந்து, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் ரோபோடிக்ஸ் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது, இதன் மூலம் பட்டதாரி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி கொடுக்க முனைந்துள்ளது.

இப்பயிற்சிக்கு பல ரோபோட்டுகள் தேவைப்படும் நிலையில், கோயிண்டியா, கோவையில் ரோபோடிக்ஸ் கிளஸ்ட்டர் திட்டத்தை டென்மார்கில் உள்ள ‘ஓடோனிஸ் கிளஸ்ட்டர்’ மாதிரியில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

கோவையில் ஏற்கனவே ரோபோடிக்சை பயன்படுத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் ரோபோடிக்சை பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களும் கோயிண்டியாவை அணுகலாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், கோவை பம்ப்செட் தொழிற்சாலைகள் மாதம் சுமார் 3 லட்சம் பம்புகள் தயாரிக்கும் திறன் கொண்டவை. இந்த திறனை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை கொண்டு மேம்படுத்தி, மின்சார வாகன உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். இந்தியாவில் கோவையைத் தவிர எந்தவொரு நகரமும், மாதம் இவ் எண்ணிக்கையில் மோட்டார்களை தயாரிக்கும் வசதிகளை பெற்றிருக்கவில்லை. அதனால் அரசு, மின்சார மோட்டார்கள் மற்றும் அதற்கான ஆராய்ச்சி மையத்தை கோவையில் நிறுவ நிதியுதவி வழங்கி, கோவை பம்ப்செட் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

கோயிண்டியாவின் 18 வது பொதுக்குழு கூட்டத்தில், கடந்த உடனடி தலைவர் ஜெயக்குமார் ராமதாஸ், கோயிண்டியா நிறுவன தலைவர் ராஜேந்திரன், பாலசுந்தரம், கடந்த தலைவர்கள் விஸ்வநாதன், குப்புசாமி, சீமா தலைவர் விக்னேஷ், IIF தென்னிந்திய தலைவர் முத்துகுமார், IIF – கோவை தலைவர் சத்தியமூர்த்தி, CII-கோவை மண்டல தலைவர் பிரசாந்த், சிட்டார்க் தலைவர் செந்தில்குமார், சீமா மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட்டின் தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் பல சங்க நிர்வாகிகள் பலர் பங்குபெற்றனர்.