“கலை அறிவியல் படிப்புகளுக்கு இஸ்ரோவில் அதிக வேலை வாய்ப்பு”

– இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், ஆராய்ச்சி மற்றும் முதுகலை கணினி பயன்பாடுகள் துறை சார்பாக தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி பேசுகையில்: நமது இந்திய அரசு எலக்ட்ரானிக்ஸ் துறையை மேம்படுத்த மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றது. ஒரு இலட்சம் கோடி எலக்ட்ரானிகஸ் துறையை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது.

நம் நாடு அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகின்றது. அது நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டு வருகின்றது. முக்கியமாக டெக்னாலஜியின் வளர்ச்சி மிகப்பெரிய பங்கு வகுக்கின்றது. முன்பு எல்லாம் புயல் உருவானால் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தோம். ஆனால் தற்போது டெக்னாலஜியின் வளர்ச்சியில் சேட்டிலைட் மூலம் நமக்கு முன்கூட்டியே தகவல் தொடர்பு ஏற்பட்டு புயலால் வரும் பேரழிவை தடுக்க முன்னேற்பாடுகளை செய்து வருகின்றோம்.

இஸ்ரோ என்றால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பணிபுரியும் இடம் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது தவறு. அதிகமாக கலை அறிவியல் பாடப்பரிவுகள் படிப்பவர்களுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இஸ்ரோவில் உள்ளது.

மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சி முக்கியம். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதீர்கள். நீங்கள் உங்களது வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில் ரிஸ்க்கான முடிவுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா தன் வளர்ச்சியின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கும் நாடாக மாறும். அனைத்து மாணவர்களுக்கிடையே ஏதாவது ஒரு சிறந்த திறமை இருக்கும். அது என்னவென்று அவரவர்களுக்கே தெரியும். அதை நன்கு மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

சிறு சிறு இலக்குகளை நோக்கிப் பயணித்து அதில் வெற்றி அடையுங்கள். மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க துவங்குங்கள். அதே போல்தான் இஸ்ரோவில் ராக்கெட்டும். உங்களுடைய முதல் எதிரியே தயக்கம் தான், அதனை தூக்கி எறியுங்கள். உங்களுடைய வாழ்வில் வெற்றி நிச்சயம் கிட்டும் என்று பேசினார்.

தேசிய அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இந்தியா முழுவதில் இருந்து பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள், பேராசிரிய-பேராசிரியைகள், கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்குதல், தொழில்நுட்ப வினாடி வினா, மார்க்கெட்டிங் பிழை திருத்துதல், வலை அமைப்பு போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இக்கருத்தரங்கில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.