இது உங்களுக்கான அரசு, உரிமையுடன் கோரிக்கை வையுங்கள்!

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவை ஈச்சனாரியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் அரசு சார் நிகழ்ச்சிகள் மற்றும் திமுக சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதற்காக 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிடவும் கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் சார்பாக பல்வேறு துறை சார்பாக வைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.

கோவை மாவட்ட முன்னேற்றத்திற்காக ரூ.663 கோடி மதிப்பளவில் 748 புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். 1,07,062 பயனாளிகளுக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கினார். ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்வில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 60 கல்லூரி மற்றும் 200 அரசுப் பள்ளிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது:

முதல்வராக பதவியேற்ற இந்த 15 மாதங்களில் 5 வது முறையாக கோவை வருகை புரிந்துள்ளேன். இது இந்த மாவட்டத்தின் மீதும், மக்கள் மீதும் வைத்துள்ள அன்பின் அடையாளம் தான் எனக் கூறினார்.

இன்று நடைபெறும் இந்த விழாவை அரசு விழா என்பதை விட, “கோவை மாநாடு” என்றே சொல்லலாம். திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பையும், மரியாதையையும் காட்டுவதற்கு இந்த மாநாடே சாட்சி என பெருமிதம் படப் பேசினார்.

எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இங்கு கூடி இருக்கும் மக்களின் முகமலர்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கோவை என்றாலே பிரம்மாண்டம் என தெரிவித்த அவர், தென் இந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக கோவை விளங்குகிறது. கோவையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் தொழிலாளர்கள் மிகுந்த மாநிலமாக கோவை உள்ளது.

நூற்பாலைகள், விசைதறி, வார்பாலைகள், மோட்டார், பம்ப், உதிரி பாகம், நகை தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் இங்கு உள்ளன என்றார்.

அதிகமான பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதும் கோவையில் தான் எனக் கூறிய அவர், கணக்கில்லாத பல உதவிகளை திமுக அரசு செய்து வருவதாகவும், ஆனால் சிலர் சிறு உதவி செய்தாலும் அதற்கு கணக்கு காட்டுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பல்வேறு மாநில அரசுகள் தமிழக அரசின் முற்போக்கு திட்டங்களை உன்னிப்பாக கவனித்து அதனை பின்பற்றி வருகின்றன.

திமுக ஒடுக்கப்பட்டவர்களை, அடக்கப்பட்டவர்களை அரவணைத்து நன்மை செய்யும் ஆட்சியாக இருப்பதோடு, திமுக அனைவருக்குமான அரசாகவும் செயல்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

சிலர் காழ்புணர்ச்சியால் விமர்சனம் செய்து தூற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் பாராட்டு எனக்கு தேவையில்லை. மக்களின் பாராட்டே போதும். அவர்களின் மகிழ்ச்சியே என்னை மகிழ்வடைய செய்கிறது. மக்களின் சிரிப்பில் இறைவனை, பேரறிஞர் அண்ணாவை, கலைஞரை காண்கிறேன்.

மற்றவர்கள் என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. எதிர்ப்பையும், அடக்குமுறையையும் மீறி வளர்ந்தவன் நான் என்றார்.

தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு குந்தகம் செய்தால், அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்பதையும் அழுத்தம் திருத்தமாக அவர் பதிவிட்டார்.

இந்த ஓராண்டில் ஓராயிரம் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பேசிய அவர், இது உங்களுக்கான அரசு, உரிமையுடன் கோரிக்கை வையுங்கள் என்று பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோவை மாவட்டம் பள்ளி, கல்லூரி நிறைந்த கல்வி மாவட்டமாக இருப்பதால் மறைந்த முதல்வர் கலைஞர் நினைவாக கோள் அரங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார். இது கல்விக்கான ஒரு ஆய்வு கூடமாக அமையும் என்றார்.

இந்த விழாவில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலதுறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிராதப், மேயர் கல்பனா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.