பாரதிய வித்யா பவன் சார்பில் அருணகிரிநாதர் விழா

பாரதிய வித்யா பவன் சார்பில் கோவையில் 19 ஆவது ஆண்டாக அருணகிரிநாதர் விழா  நடைபெற்றது .

கோவையில் உள்ள பாரதிய வித்யாபவன் சார்பில் , ஆர் எஸ் புரம் பகுதியில்  19 ஆவது ஆண்டாக அருணகிரிநாதர் விழா நடைபெற்றது. ஆன்மீகம், அருளனுபவம், இசை வழிபாடு என்ற மூன்று கோணங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் , தமிழ்த்துறை தலைவர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார் . ‘அருணகிரியே அருட்கடலுக்கு ஏற்றம்’ என்ற தலைப்பில் பேசிய அவர், அருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும் என கூறினார்.

முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர், ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடி உள்ளதாகவும், கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள் என கூறினார். மேலும் அருட்குரு இராகவன் கலந்து கொண்டு  , அருணகிரிநாதரின் திருப்புகழ் இசை வழிபாட்டினை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாடல்கள் பாடி வழிபட்டனர். ஏராளாமான இசை கலைஞர்கள், மாணவர்கள் , பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.