எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெற்றோரிடம் கூறுங்கள்! – மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுரை

கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் “கைத்தறிக்கு கைகொடுப்போம்” என்ற நிகழ்ச்சி கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர்களின் உழைப்பையும், கைத்தறி தொழில்களின் பயன்களையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் மூலமாக சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2500 சேலைகள் வாங்கப்பட்டு, கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் ஆசிரியர்களும் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் கல்லூரி மாணவிகள் கைதறி துணிகள் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மனித குலத்தை நாகரிகமாக மாற்றும் சக்தி ஆடைகளுக்கே உள்ளது. உடை என்பது நமது மானத்தை காப்பதற்கு மட்டுமல்ல. மற்றவர்கள் மதிக்க கூடிய அளவிற்கு நமது ஆடை அமைய வேண்டும்.

மேலும் தான் 1989 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியின் முதல்வர் அனைவரையும் சேலை கட்டுமாறு கூறுவார், வாரத்தில் ஒரு நாள் மட்டும் மாடர்ன் துணி உடுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும். தற்போது உடைகளை நமது வசதி கேற்ப மாற்றி கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், சில சமயங்களில் மாணவிகள் கோழைத்தனமான முடிவுகள் எடுப்பது வேதனைக்குரியதாக உள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெற்றோரிடம் கூற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கைத்தறி துணிகளை வாங்கி கைத்தறி நெசவாளிகளை ஊக்கவிக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தாட்கோவில் வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி பயிற்சி என்ற திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், எம்.ஐ.டி, ஐ.ஐ.டி சேரும் மாணவர்களுக்கு கல்விக்காக அரசு சார்பிலேயே கடன் வழங்கப்பட்ட உள்ளது.

மாணவர்கள் கல்லூரியில் பயிலும் போதே தொழில் செய்து கொண்டு படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர உள்ளோம், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

வங்கி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு முகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவ, மாணவர்களி்ன் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் இருப்பதாக பல மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பது தடைபட்டது. தற்போது அதன் அளவு 8 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கொஞ்சம் அதிகமாகவே விண்ணப்பங்கள் வந்துள்ளன என தெரிவித்தார்.