மாநில அளவிலான கராத்தே: 900 பேர் பங்கேற்று அசத்தல்

கோவையில் நடைபெற்ற தமிழக அளவிலான கராத்தே போட்டியில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர்.

மாநில அளவிலான தமிழ்நாடு ஓப்பன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த போட்டியை பி.எஸ்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில், ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 5 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிரகாசன், பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ், துறை தலைவர்கள் செந்தில் குமார், அரசு, கிருஷ்ணம்மாள் கல்வி குழுமங்கள் நிர்வாக அறங்காவலர் கோபி குமார் மற்றும் கராத்தே சங்க நிர்வாகிகள் நீல் மோசஸ், வெங்கட், பால் விக்ரமன், வீரமணி, சினுத், பாலசுப்ரமணியம், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.