பி.எஸ்.ஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் அப்பளைட் இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் இளங்கலை, முதுகலை படித்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பிரகாசன் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சென்னை மகேந்திரா அண்ட் மகேந்திரா லிமிடெட்டின் ஹெட் ஆப் ப்ராடக்ட் டெவலப்மென்ட் ஐ.டி & சீனியர் ஜெனரல் மேனஜர் ஸ்ரீவல்லபா ஜி குல்கர்னி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: பட்டம் பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட சூழலிலும் மாணவர்கள் நல்ல முறையில் படித்துள்ளதாக கூறினார்.

மேலும், பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் வழி கற்றலை மாணவர்களும், ஆசிரியர்களும் வெகு சீக்கிரமே கற்றுக்கொண்டனர்.

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான மிக சிறந்த இடம் என்றும், இங்கு படிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது எதிர்காலத்தில் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு அழைத்து செல்லும் எனக் கூறினார்.

பின்னர், உலகில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றங்கள் பற்றியும், அதனால் ஏற்படும் பயன்கள் பற்றியும் தனது உரையில் பேசினார்.

விரல் நுனியில் தற்போது உலகம் உள்ளது என்றும், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய பங்கினை பெற்றுள்ளதாகவும், அதனை நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதும் முக்கியம் எனக் கூறினார்.

கொரோனா காலத்தில் மஹேந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனம் குறித்தும் மாணவர்கள் இடையே எடுத்துரைத்தார்.

வாழ்வில் பிறரின் அறிவுரையை வேண்டாம் என ஒதுக்கி வைக்க கூடாது எனக் கூறிய அவர், பிறரின் அனுபவமும், ஆலோசனையும் ஏதோ ஒரு வகையில் நம் சிந்தனைக்கு உதவும் என்றார்.

ஆனால் எல்லா யோசனைகளும் மிக சிறந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற தனது கருத்தையும் அவர் பதிவிட்டார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 816 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.