விதி

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை வெளியிட்ட தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாகத்தையும், எடப்பாடி பழனிசாமிக்கு சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் அடிப்படை விதிகளில் எம்.ஜி.ஆர் வகுத்து வைத்த கவசம் தான் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாத்து நிற்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஓ.பி.எஸ்.,க்கு சாதகமான தீர்ப்பு:

அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிகாரப் போட்டியில் யார் வெல்லப் போகின்றனர் என்பதை இனிமேல், நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் தீர்மானிக்கப் போகிறது. கடந்த ஒரு மாதங்களாகவே, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அதிமுக விவகாரம் தொடர்பான வழக்குகள் சூடுபிடித்துள்ளன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு அதிமுக தொண்டர்களை வேதனையடைய செய்துள்ளன.

திமுகவை எதிர்த்து நிற்க வேண்டிய அதிமுக, உள்கட்சி பிளவால் நீதிமன்ற வாசல்களில் படியேறி நிற்பது தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மனதை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே அதிமுக கட்சி நிர்வாகத்தில் தொடர வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு புதன்கிழமை தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

இத்தீர்ப்பின்படி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் தொடர்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது, துணைப் பொதுச்செயலர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வானது, பன்னீர்செல்வம் அணியில் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளராக கு.பா.கிருஷ்ணன் தேர்வானது மற்றும் மாவட்டச் செயலர்கள் நியமனம், நீக்கம் உள்ளிட்டவை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 95 சதவீதம் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தும், 5 சதவீத நிர்வாகிகள், பிற பொறுப்பாளர்களை மட்டுமே வைத்திருக்கும் பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாகவோ அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராகவோ தீர்ப்பு வருவதற்கு என்ன காரணம் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கேடயம்:

அரசியல்வாதிகள், அரசியல் நோக்கர்களாலேயே துல்லியமாக கணிக்க முடியாத அளவுக்கு திணறடிக்கும் நுட்பமான சூட்சமம் அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளில் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர் வடிவமைத்தது தான் அந்த சூட்சமம்.

திமுகவில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்களால் தூக்கி எறியப்பட்ட எம்.ஜி.ஆர், தான் உருவாக்கிய அதிமுகவில் எதிர்காலத்தில் தனக்கு ஏற்பட்டது போன்ற சூழ்ச்சி வலையில் சிக்கிவிடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கியது தான் அதிமுகவின் அடிப்படை விதிகள்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அந்த அடிப்படை விதி தான் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான நிர்வாகிகள் பலம் கொண்ட பன்னீர்செல்வத்துக்கு இப்போது பாதுகாப்பு கேடயமாக இருக்கிறது. அதிமுக அடிப்படை விதிபடி கட்சியின் அதிகபட்ச அதிகாரத்தில் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலரை, நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல, பொதுச்செயலர் பதவியை அடிமட்ட தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, பொதுக்குழுவோ அல்லது செயற்குழுவோ தேர்வு செய்ய இயலாது. இந்த அடிப்படை விதிகள் தான் இப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்புக்கு அடிப்படை ஆதாரங்களான நிற்கின்றன.

அதாவது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலர் பதவியை வகித்த போது அவர்களிடம் அதிமுகவின் முழு அதிகாரமும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலர் பதவி ஜெயலலிதாவுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன.

அதிமுகவின் உயர்ந்தபட்ச அதிகார பதவிகளான ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 50 சதவீத அதிகாரமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 50 சதவீத அதிகாரமும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அதன்படிதான், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019 மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல்கள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடுவோர்களுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்குவதற்கான ஏ, பி பாரங்களில் இணைந்தே கையெழுத்திட்டனர்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர் உருவாக்கிய அடிப்படை விதியான தொண்டர்களால் தான் கட்சித் தலைமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அறிவித்து நடத்தினர். இதில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஏகமனதாக, போட்டியின்றி ஒன்றரை கோடி தொண்டர்களால் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வானதாக தேர்தல் ஆணையர்களாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்தனர். தேர்தல் முடிவையும் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதன்படி இவர்களின் பதவி காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது.

இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட இருவரும் இணைந்தே கையெழுத்திட்டனர். மீண்டும் ஒற்றைத் தலைமை கோஷத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எழுப்பியதால் அதற்கு உடன்படாமல் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார் பன்னீர் செல்வம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அதனால், இப்பொறுப்புகள் தானாகவே காலாவதியாகிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர்.

ஆனால், பன்னீர்செல்வம் தரப்போ, எம்.ஜி.ஆர் வகுத்து வைத்த அடிப்படை விதிகளின்படி ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்தல் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வாகியுள்ளதால் அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுவது என்பது வெறும் சம்பிராதயத்துக்காக மட்டுமே என தொடர்ந்து வாதிட்டு வந்தனர்.

இருப்பினும், மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் இன்றி தலைமை கழக நிர்வாகிகள் என்ற அறிவிப்பை வெளியிட்டு ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டி பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதுடன், இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமியை தேர்வும் செய்தனர்.

இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தான், ஜூன் 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலோடு தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

தொண்டர்களுக்கே அதிகாரம்:

எம்.ஜி.ஆர் வகுத்த அடிப்படை விதிகளை அடிப்படையாக கொண்டு தான் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்கின்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதிமுகவை பொறுத்தவரை நாட்டில் உள்ள பிற கட்சிகளுடன் ஒப்பிட முடியாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் காரிய கமிட்டி, பாஜகவை பொறுத்தவரை ஆட்சிமன்றக்குழு, இடதுசாரிகளை பொறுத்தவரை அரசியல் தலைமைக்குழு, திமுக போன்ற பிற கட்சிகளை பொறுத்தவரை பொதுக்குழு ஆகியவற்றுக்கு தான் அதிகபட்ச அதிகாரம் இருக்கிறது என்பதே உண்மை.

ஆனால், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவில் பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது. அதேநேரத்தில் தொண்டர்களுக்கு தான் அதிக அதிகாரம். அதாவது தொண்டர்களால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வாகும் பொதுச்செயலர் அல்லது இப்போது உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தான் அதிகபட்ச அதிகாரம். 5 சதவீதத்துக்கும் குறைவான கட்சி நிர்வாகிகள் பலம் கொண்ட பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் வெற்றிக்கிடைக்கிறது என்றால் எம்.ஜி.ஆர் வகுத்து வைத்த தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சித் தலைமையை யாராலும் கட்டுப்படுத்த முடியதாது என்ற எம்.ஜி.ஆர் சூட்சம் தான் முக்கிய காரணம்.

எம்.ஜி.ஆர் வகுத்து வைத்த இதே கேடயம் தான் 1997 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவையும் காப்பாற்றியது. ஜெயலலிதா மற்றும் திருநாவுக்கரசு இடையே முரண் ஏற்பட்டு தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 8 எம்.எல்.ஏ.க்களில் 4 எம்.எல்.ஏ.க்கள், 14 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர் மற்றும் கணிசமான மாநில, மாவட்ட, ஒன்றிய, பொதுக்குழு நிர்வாகிகள் திருநாவுக்கரசை ஆதரித்தனர்.

அப்போது தேர்தல் ஆணையத்துக்கு இவ்வழக்கு சென்றபோது அதிமுக அடிப்படை விதிகளை நுட்பமாக ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அதிமுக அடிப்படை விதிபடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலருக்கு தான் முழுஉரிமை உண்டு என்பதை சுட்டிக்காட்டி பொதுச்செயலர் பதவி, கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை ஜெயலலிதாவுக்கு வழங்கியது.

நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளதால் அதிமுக விவகார வழக்கு இனி இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்து வரும் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வந்தாலோ அல்லது மீண்டும் ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டாலோ தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை இவ்வழக்கு செல்லப்போவது உறுதி.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு?

நீதிமன்றங்களின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானது. கட்சியின் சின்னம், கொடி ஆகியவை யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது என்பதால் அந்த ஆணையத்தின் தீர்ப்புதான் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும்போது தான் அந்த தீர்ப்பு வெளியாகக்கூடும் என்பதால் அதுவரை அதிமுக விவகாரம் ஜவ்வாய் இழுத்துக்கொண்டே தான் இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

அதிமுகவின் எதிர்காலம் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், அதிக கவலையில் இருப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த, அவரை பின்பற்றி வரும் தொண்டர்கள்தான். எம்.ஜி.ஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வலுவாக வளர்த்தெடுத்த அதிமுகவில் உயர்ந்தபட்ச பதவிகளை பெற விரும்பும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி உள்பட யாராக இருந்தாலும், அதிமுகவின் அடிப்படை விதிகளின்படி செயல்படுவது தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான விசுவாசமாக இருக்கும். அதை செய்யும்போது தான் அதிமுகவின்உண்மையான தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இறுதி முடிவு

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமே தொடர்வார் என்ற நிலை உருவாகியுள்ளதால், அன்றாட கட்சிப் பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்றம் வரை சென்றாலும் அதில் தீர்ப்பு கிடைக்க நீண்ட நாள்கள் பிடிக்கும். இதற்கிடையில் தேர்தல் ஆணையமும் தங்களது முடிவு என்ன என்பதை தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டுமெனில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். இரண்டு மாத காலமாக ஒருவரை ஒருவர் கடும் விமர்சனம் செய்துவிட்டு ஓ.பன்னீர்செல்வத்துடன் இரட்டை இலைக்காக எடப்பாடி பழனிசாமி சமரசம் செய்தால் இதுவரை கட்டமைக்கப்பட்ட அவரது பிம்பம் உடைக்கப்படும்.

மேலும், முதல்வர் வேட்பாளராக அவர் வருவதே சிரமம் ஆகிவிடும். ஆகையால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மீண்டும் ஒரு பொதுக்குழுவை கூட்டி அதில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றலாம் என நினைத்தாலும் பொதுக்குழுவை கூட்டுவதற்கும், தீர்மானங்களை அங்கீகரித்து நிறைவேற்றுவதற்கும் பன்னீர்செல்வத்தின் கையெழுத்து நிச்சயம் தேவை. ஆகையால் தான் மீண்டும் உயர் நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இப்போதைய சூழலில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். ஆனால், அந்த முடிவு மக்களவைத் தேர்தலையொட்டி தான் எடுக்கப்படும். தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் போது கூட, இரட்டை இலை முடங்கலாம் என்ற சூழல் நிலவினால், இப்போது உள்ளது போல எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து பணியாற்றுவார்களா அல்லது தேர்தல் நேரத்தில் அணி மாறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்போதைய அரசியல் சூழல்களை பார்க்கும்போது ஸ்டாலினுக்கு மாற்று சக்தி எடப்பாடி பழனிசாமி தான் என்ற நிலை மாறிவிட்டது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் யார் அதிக வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் தான் ஸ்டாலினுக்கு மாற்று சக்தி என்ற அந்தஸ்து கிடைக்கும். இருவருமே தங்களுக்கு தான் அதிக வாக்கு வலிமை கிடைக்கும் என நம்புகின்றனர். இதனால் தான் இருவரும் சமரசம் ஆகும் வாய்ப்பு குறைவு. கட்சியின் 95 சதவீத ஆதரவாளர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தாலும், தமிழகம் முழுவதும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவாளர்கள் திரளும் வாய்ப்பு உள்ளது.

இரட்டை இலை இல்லாத சூழலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் அணிக்கு அதிக வாக்கு கிடைக்கும். பாஜக எந்த அணியை தேர்வு செய்கிறது என்பதை பொறுத்து இந்த நிலை மாறும். இதுவரை கூட்டணி முடிவை அதிமுக எடுக்கும் நிலை மாறி பாஜகவே எடுக்கலாம் என்ற சூழல் உருவாகலாம்.

இருவரையும் சமமாக மோடி நடத்துகிறார் என தெரிகிறது. ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர் என்ற அடிப்படையில் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தார். இதன் மூலம் மோடியை எதிர்க்க துணிந்துவிட்டாரா எடப்பாடி பழனிசாமி என்ற கருத்து எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பு தான் இறுதியாக இருக்கும் என்றார் ரிஷி.