“திருக்குறள் ஓர் அட்சயபாத்திரம்”

– வள்ளுவ மெய்யறிவு நூல் வெளியீட்டு விழா

ராஷித் கஸ்ஸாலி எழுதிய வள்ளுவ மெய்யறிவு (புதிய தலைமுறையினருக்கான அறம்சார் கல்வி) எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா விஜயா பதிப்பகத்தின் சார்பில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளர் ராஷித் கஸ்ஸாலி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண் இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார்.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம், மலையாளத்துக்கும், தமிழுக்கும் மிக நெருக்கமான உறவு உண்டு என்றார். பொறாமை, பகை உணர்ச்சி ஆகியவற்றை விளக்கி, நன்றி உணர்ச்சி, கருணையே சமுதாய மாற்றத்திற்கு முக்கியம் என்பதை இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் வலியுறுத்தியுள்ளார் என தனது வரவேற்புரையில் பேசினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் முதல் நூலை வெளியிட பாரதியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் காளிராஜ் பெற்றுக்கொண்டார்.

தமிழுக்கும், மலையாளத்துக்கும் பல ஒற்றுமை உண்டு 

மாவட்ட ஆட்சியர் தனது தலைமை உரையில், மலையாளத்தில் முதலில் வெளியான இந்த நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு (வள்ளுவ மெய்யறிவு) மிக எளிதாக உள்ளது. இந்தப் புத்தகத்தை தான் இரு மொழியிலும் படித்துள்ளதாக கூறினார். மேலும் இப்புத்தகம் படிக்க கிடைத்ததை வள்ளுவரின் ஆசீர்வாதமாக கருதுவதாக தெரிவித்தார்.

மாணவர்களை நல்வழிப்படுத்துவதே இந்நூலின் முதல் நோக்கமாக உள்ளதோடு, ஆழமான பல கருத்துக்களையும் கொண்டுள்ளது.

தமிழுக்கும், மலையாளத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஆதிதிராவிட மொழியில் இருந்தே தமிழும், மலையாளமும் உருவானது.

திருக்குறள் ஒரு அட்சயபாத்திரம். அதில் உள்ள 1330 குறள்களில் அறம், ஆட்சி, அரசியல், குடும்பம், நட்பு உள்ளிட்ட பலவற்றை பற்றிக் கூறுகிறது என்றார்.

தாய்மொழி கல்வியே சிறந்தது 

பாரதியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் காளிராஜ் தனது பாராட்டுரையில்,

கல்வியை தாய் மொழியிலேயே சிறப்பாக படிக்க முடியும். தாய் மொழிதான் உண்மையான, உணர்வு பூர்வமான கருத்தை வெளிப்படுத்தும் எனக் கூறினார்.

உலகிலேயே திருக்குறள் தான் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எனக் கூறிய அவர், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்” என்ற குறளை மேற்கோள் காட்டி, சொல்லுவது யாராக இருந்தாலும், உண்மை தன்மையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்றார்.

அனைத்து துறையிலும் டிஜிட்டல் முறை வந்துவிட்டது. தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு அதனுடன் பயணிக்கும் போதே நிலைத்து நிற்க்க முடியும் என்றார்.

வாழ்க்கையை வழிநடத்தும் திருக்குறள் 

கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி தனது பாராட்டு உரையில், உன்னத நோக்கத்தோடு, சிறந்த லட்சியத்தோடு இந்த நூலை எழுத்தாளர் எழுதியுள்ளார் எனப் பேசினார்.

ஒழுக்கம், அறம், வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிப்பதாக கல்வி இருக்க வேண்டும் என்ற தனது கருத்தினை பதிவிட்டார்.

எளிமையான புத்தகங்களையே வாசகர்கள் படிக்க விரும்புவர். அந்த வகையில் இந்தப் புத்தகம் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகளை இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் பட்டியல் இட்டுள்ளார் என்றும், திருக்குறள் ஒருவரை வழி நடத்தி செல்ல உதவுகிறது என்றும் கூறினார்.

மேலும், திருக்குறளும், திருகுரானும் என்ற நூலை எழுத வேண்டும் என எழுத்தாளர் ராஷித் கஸ்ஸாலிக்கு தனது வேண்டுகோளை விடுத்தார்.

நெறியுடன் வாழுங்கள்!

ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் சிறப்புரை ஆற்றி பேசுகையில், இளைஞர்கள், மாணவர்களின் கையில் இப்புத்தகம் சென்று சேரவேண்டும். எதிர்கால தலைமுறையினரை சரிப்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு இல்லாமல் கண்ணியமாக இருப்பதே சுதந்திரம் என்றும், நெறியுடன் வாழும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் பேசினார்.

திருக்குறள் நல்ல சமூகத்தை உருவாக்கும்!

 

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் ராஷித் கஸ்ஸாலி (நூலாசிரியர்) ஏற்புரையில், மாணவர்கள் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தப் புத்தகத்தை எழுதினேன்.

அறிவு என்பது தகவல் சேகரிப்பாக மட்டுமே இன்று மாறிவிட்டது என பேசிய அவர், திருக்குறள் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும் என்றார். வள்ளுவ மெய்யறிவு தனது முதல் புத்தகம் என்பதில் பெருமைபடுவதாகவும் கூறினார்.

இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை விஜயா பதிப்பகமும் மலையாள புத்தகத்தை ஓலிவ் பதிப்பகமும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.