
பிரதமர் நரேந்திர மோடி இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்து பாஜகவினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், இலவச திட்டங்கள் வழங்க கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்றும், எந்த அடிப்படையில் இந்த கருத்து கூறப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
இலவச திட்டங்கள் கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா என பேசிய அவர், அவை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என எந்த பொருளாதார நிபுணத்துவத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என பேசினார். மேலும் எந்த அடிப்படையில் மாநில அரசின் கொள்கைகளை மாற்றக் கூறுகிறீர்கள்? என்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர், இலவச திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கிறதா என பெரிய விவாதங்கள் நடப்பதாகவும், அந்த விவாதங்களுக்கு அப்பால், அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் முக்கியமானது மனிதநேயமும், செயல்திறன் தான் என கூறியுள்ளார். அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம் என்பதையும் குறிப்பிட்டார்.
உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்களின் அறிவுரையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குமேல் அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் தேவையில்லை. நல்ல கருத்துக்களை, மனிதநேயமிக்க அறிவுரைகளை யார் சொன்னாலும் ஏற்போம் என்றார்.
ஆனால், சர்வாதிகாரமாக ஒருவர் சொல்வதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என கூறும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார்.