மருத்துவரின் கனவினால் உலக தரத்தில் உயர்ந்து நின்ற அரசுப் பள்ளி

தாராபுரம் இல்லியம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த லெனின் பாபு, தற்போது கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

அவர் தனது கிராமத்தில் அடர்வனம் (சிறு காடு) என்ற நோக்கில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். தற்போது இவரின் முயற்சியினால் கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த 3d ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாகி உள்ளது.

இது பற்றி டாக்டர் லெனின் பாபு கூறும் போது: பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திகிறார் திருவள்ளுவர். அனைவருக்கும் சமமான கல்வி என்பதே எனது முக்கிய குறிக்கோளாக உணர்கிறேன். ஒரு சிறந்த கல்விக்கூடம் மிக சிறந்த மாணவர்களை உருவாக்கும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமுமில்லை.

எனவே என்னுடை தங்கை கல்பனா தலைமை ஆசிரியையாக பணிபுரிகின்ற கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வரபோகின்ற ஆகுமேண்டின் ரியாலிட்டி என்று சொல்லப்படுகின்ற உலகத்தரம் வாய்ந்த 3d ஸ்மார்ட் வகுப்பறைகளை தற்போதே புரொஜெக்டர், கணிணிகள் துணையுடன் 3d ஸ்மார்ட் வகுப்பறைகளை கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உருவாக்கியுள்ளோம்.

மேலும் பழைய கட்டிடங்களை புதுப்பித்தும், புதிய மேசைகள், நாற்காலிகள், கணினிகள், மின் விசிறிகள், 800 சதுர அடிகளுக்கு பால் சிலிங், சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் வசதிகள், மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமிரா, மண் தரைகளை மாற்றி பவேர் பிளாக்ஸ் தரைகள் அமைத்தல், சுத்தமான கழிவறை வசதிகள் அமைத்துள்ளோம். இதன் மூலம் கரையூர் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.

சுமார் 15,00,000 ரூபாய் செலவில் ஆறு மாதங்களாக திட்டமிட்ட இப்பணிகளுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் கோவை மற்றும் சிறுமுகை ரோட்டரி கிளப், சிறுமுகை எஸ்.ஐ.வி பள்ளி மாணவர்கள் அமைப்பு, ஸ்டான்லி முன்னாள் மருத்துவ மாணவர்கள் அமைப்பு , கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டல் மருத்துவர் குழு, தாராபுரம் விழுதுகள் பவுண்டேசன், காளிபாளையம் நன்னயம் அறக்கட்டளை, எஸ்.எம்.சி குழு, கரையூர் மற்றும் இல்லியம்பட்டி ஊர் பொதுமக்கள் அனைவரும் நன்கொடை அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. அரசு அனுமதித்தால் கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை போன்றே பல பள்ளிகளை மாற்றியமைக்க முடியும் என்கிறார்.