கோவையில் மிதிவண்டி, பாதசாரிகள் நடந்து செல்ல சாலையில் சிறப்பு ஏற்பாடு

கோவை கிராஸ்கட் ரோடு, பிக்பஜார் ரோடு, நஞ்சப்பா ரோடு, ராஜ வீதி ஆகிய பகுதிகளில் மிதிவண்டி மற்றும் பாதசாரிகள் எந்த வித இடையூறும் இல்லாமல் செல்ல சாலைகளில் சிறப்பு வசதி செய்யப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள உக்கடம் பெரிய குளம் உள்பட பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டு நடைபாதை வசதி, வைபை வசதி, நவீன இருக்கைகள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகரின் முக்கிய சாலைகளின் ஓரம் மிதிவண்டிகள் செல்வதற்கு என்று தனி பாதை, மக்கள் நடந்து செல்ல நடைபாதைகள் அமைத்து அவற்றின் மேல் பகுதியில் பல வண்ண நிறங்களில் அழகுபடுத்தி சிறப்பு வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் கோவை மாநகராட்சி எதிரே டவுன்ஹாலில் சாலையோரம் உள்ள நடைபாதையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நடைபாதையில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து செல்லும் வகையில் டயர்களை கொண்டு இருக்கையும் அமைக்கப்பட்டன.

மேலும், சாலைகளின் சந்திப்பு பகுதிகளில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும் வகையில் ரோட்டில் பல வண்ண நிறங்களில் சாயம் பூசப்பட்டு இருந்தது. இதுபோன்று கிராஸ்கட் ரோட்டிலும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மீண்டும் நிரந்தரமாக கிராஸ்கட் ரோடு, பிக்பஜார் ரோடு, நஞ்சப்பா ரோடு, ராஜ வீதி ஆகிய பகுதிகளில் பாதசாரிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்து செல்ல சாலைகளில் சிறப்பு வசதி செய்யப்பட உள்ளது.

ஜெர்மனி நாட்டின் தன்னார்வ அமைப்புடன் ஒன்றிய அரசு இணைந்து இந்தியாவில் ஒடிசா, கொச்சின், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரூ.7.5 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சாலைகளில் வண்ணம் பூசப்பட்டு நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

வெயில், மழை போன்றவற்றில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் மேற்கூரை அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும். அதே போல் மிதிவண்டிகள் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும். டெண்டர் விடும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.

பணி துவங்கிய நாளில் இருந்து 120 முதல் 150 நாட்களில் பணிகள் நிறைவுபெறும். பிக் பஜார் ரோட்டில் டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோயிலில் இருந்து ஒப்பணக்கார தெரு சந்திப்பில் உள்ள அத்தர் ஜமாத் மசூதி வரையிலும், ராஜ வீதியில் ஐந்து முக்கு சாலை முதல் புனித மைக்கேல் பள்ளி வரையிலும், நஞ்சப்பா சாலையில் அச்சாலை முதல் லட்சுமி வளாகம் வரையிலும், கிராஸ்கட் சாலையில் லட்சுமி காம்ப்ளக்ஸ் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் சந்திப்பு வரையிலும் இப்பணிகள் நடைபெற உள்ளன என்று கூறினார்.