இந்தியாவின் வரலாற்று தரவுகளை அசராமல் கூறும் கோவை சிறுமி!

கோவையை சேர்ந்த சிறுமி தனது அபார நினைவாற்றலால் இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளையும், சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும் மிகச்சரியாக கூறி பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் இந்துமதி தம்பதியினர். இவர்களது 6 வயது மகள் ஆராத்யா.

தனது 2 வயதில் இருந்து நினைவாற்றலைக் கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் இந்த சிறுமி. முதலில் உலக நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்களை பிழையின்றி கூறினார். தொடர்ந்து 195 நாடுகளின் தேசிய கீதங்களை கேட்டால் அது எந்த நாட்டின் தேசிய கீதம் என்பதை கட்சிதமாக கூறினார் ஆராத்யா.

இந்த சூழலில், நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் அனைத்து தகவல்களையும் வரலாறுகளையும் கூறி அசத்தியுள்ளார் ஆராத்யா.

இந்தியாவின் அரசியல், வரலாறு, புவியியல், மொழிகள், பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் உள்ளிட்ட 85 தலைப்புகளின் கீழ் எந்த கேள்வி கேட்டாலும் அசராமல் பதிலளிக்கிறார் இந்த சிறுமி.

மேலும், சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் பெயர்களையும், சுதந்திர போராட்ட வரலாற்றின் நிகழ்வுகளையும் கூறி நெகிழ வைக்கிறார் ஆராத்யா.

இவரது அபார நினைவாற்றல் திறன் லண்டன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், உள்ளிட்ட பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

தான் கற்றுக்கொண்ட வரலாற்று தரவுகளை பழங்குடியினர் பள்ளிகளுக்கும், ஆதரவற்றோரின் இல்லங்களுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.

சிவில் சர்வீஸ் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராவோர் கூட திணறும் கேள்விகளை சிறுமி ஆராத்யா சுலபமாக கையாண்டு, அலட்டிக்காமல் பதில் அளிப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.