சுதந்திர தினம் கொண்டாடிய கொங்குநாடு கல்லூரி

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் தி வெராண்டா கிளப்பின் நிறுவனர் இராஜேஷ் கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்: நம் நாட்டுக்காக உயிர்நீத்த வீரத் தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் பெற்றோம் என்றும், நம் குடும்பத்திலும் நம் ஊரிலும் கூட அத்தகைய தியாகிகள் இருப்பார்கள் என்றும், அவர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். கடந்த 75 ஆண்டுகளில் நம் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. சுயசார்புடைய தேசமாக நம் நாடு பெருமிதத்துடன் திகழ்கிறது கூறினார்.

நிகழ்வில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். தி வெராண்டா கிளப்பின் இயக்குநர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரியின் முதல்வர் லச்சுமணசாமி வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் கொங்குநாட்டில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அறியப்படாத தியாகிகளின் வாழ்வும் பணியும் தொகுக்கப்பட்டு ‘வெளியில் தெரியாத வேர்கள்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை ராஜேஷ் கோவிந்தராஜுலு வெளியிட கல்லூரி மேலாண்மைக் குழுவின் பொருளாளர் மருத்துவர் பரமசிவன் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய நாட்டுக்காக உழைந்த இராணுவம் மற்றும் கடற்படையைச் சார்ந்த அதிகாரிகளுக்கும், கார்கில் போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரரின் மனைவிக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் மௌன நாடகத்தையும், வீரப் பெண் குயிலியின் வரலாற்று நாடகத்தையும் நடத்தினர்.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இராஜேஷ் கோவிந்தராஜுலு பரிசுகள் வழங்கினார்.

தேசிய மாணவர் படையில் சாதனைகள் புரிந்த மாணவ, மாணவியருக்குக் கல்லூரியின் பொருளாளர் மருத்துவர் பரமசிவன் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணக்கர்கள் திரளாகப் பங்கற்றனர்.