அனைத்து துறையிலும் தமிழர்கள் உலகை ஆள்கின்றனர்!

– பி.எஸ்.ஜி கல்லூரியில் இணை அமைச்சர் எல். முருகன் பேச்சு

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், அதனை கொண்டாடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி கோவை பி.எஸ்.ஜி ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூஷன்சில் 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் நாடு சுதந்திரம் பெறுவதற்கு உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்ந்தும், பி.எஸ்.ஜி கல்லூரிகளுக்கு வருகை புரிந்த சுதந்திர போராட்ட வீரர்களை குறிப்பிட்டும் தனது வரவேற்புரையில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் குறித்து மாணவ, மாணவிகளின் உரை விழாவில் இடம்பெற்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பி.எஸ்.ஜி கல்லூரிகளுக்கு என்றே ஒரு தனி சிறப்பு உண்டு எனப் பேசிய அவர், பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளிக்கு ரவிந்திரநாத் தாகூர் வருகை புரிந்து தேசிய கீதம் பாடியதை குறிப்பிட்டுப் பேசினார்.

பல தரப்பட்ட மக்கள் தானாகவே முன்வந்து நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடி வருவதோடு, அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்து வருகின்றனர் என்பதை பெருமிதம்படக் கூறினார்.

நமது கொங்கு பகுதியில் பலர் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டுள்ளனர். பலர் பொதுவெளியில் அறியப்படாதவர்களாக உள்ளனர். எண்ணற்றவர்கள் நாட்டின் விடுதலையை மீட்டெடுக்க போராடி உள்ளனர். அவர்கள் மீட்டு தந்த சுதந்திர இந்தியாவில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தேசியக் கொடியின் மகிமை மற்றும் இளைஞர்களிடம் தேசிய உணர்வை ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

தமிழர்கள் அனைத்து துறைகளிலும் உலகை ஆண்டு கொண்டிருப்பதாக தனது உரையில் பதிவிட்டார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டு பேசிய அவர், இன்றைய இளைஞர்கள் அதிகளவில் தொழில் முனைவோர்களாக தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு துறையிலும் இளைஞர்கள் முக்கிய பங்கு வகித்து வருவதோடு, நாடு முன்னேறி வருகிறது எனக் கூறினார்.

பின்னர், சுதந்திர தினத்தை ஒட்டி கல்லூரி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களையும், செயல் முறைகளையும் பார்வையிட்ட அமைச்சர் அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்தார்.

நிகழ்வின் இறுதியில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுப்பா ராவ் நன்றியுரை கூறினார்.

இதில் பி.எஸ்.ஜி ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூஷனை சேர்ந்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.