உயரும் மின்கட்டணம்! சிக்கலில் தொழில்துறை!

சமீபத்தில் மின்துறையில் சில மாற்றங்கள் வர உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நிலையான மின் கட்டணம், யூனிட் கட்டணம், பீக்ஹவர் மாற்றம், ஆண்டு கட்டணம், டிரான்ஸ்மிஷன் கட்டணம், வீலிங் கட்டணம், இதர கட்டணங்கள் ஆகியவை உயர்த்தப்பட உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மற்றும் மாநிலத்தின் எஸ்.எல்.டி.சி நிறுவனம் ஆகியவை இதற்கான விவரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்துள்ளன.

இது குறித்த விவரங்கள் வெளியானவுடன் தொழில் துறையினருக்கு இது பெரும் சிரமத்தை உருவாக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இது சிக்கலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. மின்கட்டண உயர்வு போன்றவை போக, முதல் முறையாக தமிழ்நாட்டில் 8 மணி நேரம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின் நுகர்வோருக்கு அதாவது காலை 6:30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து இரவு10 மணி வரை செயல்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பல்லாண்டு காலமாக தொழிற்சாலைகள் ஒருவகையான ஷிப்டு முறை அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போதைய பீக்ஹவர் முறை மாற்றத்திற்கு ஏற்ப நேரத்தை மாற்றினால் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சிரமத்துக்கு உள்ளாவார்கள். பணிபுரிவதில் அவர்களின் ஈடுபாடு குறையும். ஏற்கனவே ஆள் பற்றாக்குறையாலும், திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும் சிறு தொழில்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன. அப்படியே நேரம் மாற்றுவது சாத்தியம் இல்லாமல், வழியில்லாமல் வழக்கம்போல செயல்பட்டால் கண்டிப்பாக கூடுதலாக நிதிச்சுமை ஏற்படும். அந்த சுமை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் தாங்கமுடியாத அளவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதைப்போலவே 6% அல்லது நுகர்வோருக்கான விலை குறியீடு மூலம் பெறப்படும் மதிப்பு இவற்றில் எது குறைவோ அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தவும் ஒரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த சிக்கலையும், கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தொழில்துறையினர் கூறுகிறார்கள்.

பல்லாண்டு காலமாக தொழிற்சாலைகள் ஒருவகையான ஷிப்டு முறை அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போதைய பீக்ஹவர் முறை மாற்றத்திற்கு ஏற்ப நேரத்தை மாற்றினால் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருகின்றனர். அந்த மூலப்பொருட்களை கொண்டு வருகின்ற போக்குவரத்து செலவு கூடுதலாக ஏற்பட்டு உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு மூலப்பொருள் விலை தாறுமாறாக உயர்ந்து தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுபோக ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தொழில் துறையினருக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி இருந்தது. அந்த நெருக்கடிகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி ஓரளவுக்கு நிலைமை சீராகி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு சீரமைப்பு போன்றவை கண்டிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாகி விடும் என்பதில் ஐயமில்லை. எனவே இப்பகுதியில் உள்ள தொழில் அமைப்புகள் ஒன்று கூடி இதை மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, இந்த விவரங்களை மாற்றி அமைக்கின்ற வகையில், தங்களுக்கு ஏதுவாக அமையும் என்ற வகையில் தொழில் துறையினர் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கமும் தொழில் துறையும் வளரவேண்டும், மின் துறையும் சீராக இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதால் இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தொழில் துறையினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றிருக்கிறார்கள். அரசு, மின் துறையை சார்ந்த அதிகாரிகள், தொழில் துறையினர் இணைந்து ஆலோசனை நடைபெறும். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று இதன்மூலம் எட்டப்படும் முடிவுகள் தான் நமது பகுதியின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக அமையும் என்பதில் ஐயமில்லை அது நடைபெறும் என்று நம்புவோமாக!