சங்கரா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் 32 வது முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராதிகா அனைவரையும் வரவேற்றார்.

சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை இணைச் செயலர் நித்யா ராமச்சந்திரன் விழாவிற்குத் தலைமை வகித்து பேசுகையில்: தரமான கல்வியை வழங்குவதற்குப் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்த பெற்றோருக்கு நன்றி கூறினார்.

உயர்நிலைப் பள்ளியில் 500 க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை இலவச உதவித்தொகையுடன் ஊக்குவிக்கும் ஒரே நிறுவனம் இதுதான் என்றும், இந்த மூன்றாண்டுக் கல்வியை மாணவர்கள் தாங்கள் கொண்டுள்ள இலக்கை மையமாகக் கொண்டு பயன்படுத்தி தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய வேண்டும் என்றும் பேசினார்.

சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலரும், இணைச் செயலாளருமான கல்யாணராமன் ராமச்சந்திரன் வாழ்த்துரையில், மாணவர்கள் பயமில்லாமல் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். வேற்றுமை இல்லாமல் ஒழுக்கத்தை முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு State Street HCL Services டெலிவரி மையத்தின் மையத் தலைவர் ராமச்சந்திரன் சுப்ரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில், ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் திறனைப்பெற வேண்டும். இன்றைய சூழலில் அது நமக்கு வேலை வாய்ப்பினைப் பெறத் துணை செய்யும். வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டு சிறந்து விளங்குவதற்கான ஆர்வம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கருத்துகளுக்கு திறந்த தன்மை முதலிய நான்கு கொள்கைகளை சுட்டிக்காட்டி மாணவர்களின் பொறுப்புணர்வை விளக்கினார்.

பாடத்திட்டத்தை வெற்றிகரமாக உள்வாங்கும் வகையில் மாணவர்கள் ஆர்வத்தையும், மீண்டும் மீண்டும் கற்றுக் கொள்ளும் திறனையும், சரியான கவனத்தையும், அணுகுமுறையையும் கொண்டிருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

உயர்நிலைப் பொதுத் தேர்வுகளில் ஐந்நூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பில் இலவச உதவித்தொகை வழங்கப்பட்டது.