சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 சதுர அடியில் கேக் தயாரித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்கள்!

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக 76 சதுர அடியில் பிரம்மாண்டமான கேக் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த கேக்கை கல்லூரியின் பி.எஸ்சி உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவ, மாணவியர்கள் தயாரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் சுவாதி ரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் இதில் பங்கேற்றார். கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கேக்கினை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் பார்வையிட்டனர்.

இதன் தயாரிப்பு குறித்து கல்லூரியின் துணை முதல்வரும், துறை தலைவருமான தீனா கூறுகையில்: சிறுதானிய வகைகளான கேழ்வரகு, சாமை, திணை, சோளம், குதிரை வாலி, ராகி, கம்பு ஆகியவற்றை கொண்டு, 250 கிலோ எடையில் 48 மணி நேரத்தில் கேக் தயார் செய்யப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டு சிறுதானியங்களின் ஆண்டு என்பதால் அதில் உள்ள நன்மைகளை எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏழு வகையான சிறுதானியங்களின் மூலம் இதனை வடிவமைத்துள்ளோம்.

இதில் பால் மற்றும் வெண்ணெய் சேர்க்கப்படாமல், வெஜிடபிள் ஆயில், முட்டை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘சிறுதானிய கேக்’ என்பதால் அப்துல் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் மாணவர்களின் சாதனை இடம் பிடித்துள்ளது எனக் கூறினார்.