இதுதான் கடைசி வெடிகுண்டா?

இத்தாலியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்ட் எடை உள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் அப்போரின் தாக்கம் இவ்வுலகையே உலுக்கி வருகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது

இந்த நிலையில், இத்தாலியில்  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று ஆற்றில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டு உள்ளது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள “போ” என்ற ஆறு 70 வருடங்களுக்கு பிறகு வறண்டுள்ளது.

இதனால் போர்க்கோ, வெர்ஜிலியோ என்ற பகுதியில் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்ட் எடை உள்ள வெடிகுண்டு ஆற்றில் இருப்பதை கடந்த மாதம் 25 ம்  தேதி மீனவர் ஒருவர் கண்டறிந்து அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து வெடிகுண்டை மீட்ட அந்நாட்டின் இராணுவம் “மெட்டோல்” பகுதிக்கு அவ்வெடி குண்டை பளுதூக்கும் இயந்திரத்தின் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர். இரண்டாம் உலகப்போர் முடிந்து நீண்ட காலம் கடந்தும் ஒவ்வொரு நாடுகளிலும் வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ள நிலையில், இதுவே கடைசி வெடிகுண்டாக அமைய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றி வருகின்றது.

 

Story by Sowndharya