ஆர்.வி.கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா அனைவரையும் வரவேற்று கல்லூரி அறிக்கை வாசித்தார்.

கல்லூரியின் செயலர் சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், மாணவர்கள் கல்லூரியில் பயின்று பட்டம் பெறுவதோடு மட்டும் அவர்களுடைய கல்வி நின்று விடுவதில்லை. வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கால மாற்றத்தின் காரணமாக விஞ்ஞான வளர்ச்சியிலும், மென்பொருள் துறையிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வியக்கும் படியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தொழில் சார்ந்த நிறுவனங்கள் பல பெருகி உள்ள போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்வது அவசியமாகிறது. மாணவர்கள் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து வேலை வாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவது அவசியம். அதற்காக தம் தனித்துவமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இளம் தலைமுறையினர் பெற்றோர்களையும், கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் மதித்து அவர்கள் அறிவுரையை ஏற்று நடத்தல் வேண்டும். இதனால் வாழ்க்கை வளமடையும் என்று மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து 2016-2019 மற்றும் 2017-2020 ஆம் கல்வியாண்டில் வணிகவியல், கணினி அறிவியல், உயிர் தொழில் நுட்பவியல், கணிதவியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயின்று முடித்த 290 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், காரமடை, எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளியின் செயலர் ஜெயகண்ணன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.