தொடரட்டும் இந்த விவாதம்!

சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதம் மிகவும் கவனத்திற்குரியதாகும். ஏனென்றால் இந்த விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து பேசி இருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். அதில் என்ன முடிவு கிடைத்தது என்பதல்ல. ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு பேசினார்கள் என்பது தான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாகவே பாராளுமன்றத்தில் நடக்கின்ற மிகப்பெரும்பாலான விவாதங்கள் சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் நேரடி தொடர்பில்லாததாகவே அமையும். அது சட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக, எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்ததாக, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் கூட சாதாரண மக்களின் நேரிடையான தொடர்பு இல்லாததாக பல நேரங்களில் இருந்து வருகிறது. அந்த வகையில் மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய விவாதம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

உலகில் ஏற்படும் சிக்கல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரம் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் தனது பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.   இன்றைய சூழலில் எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்ற அளவுக்கு உலகில் பொருளாதார சூழல் நிலவுகிறது. என்றாலும், பொருளாதார நடவடிக்கைகளை பொறுத்தவரை பல வகையான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில இடங்களில் ஏற்படும் நிகழ்வுகள் மிக கொடூரமாகவும் கூட இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பல காலமாக எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், சில ஆசிய நாடுகளிலும் வறுமை பெருமளவில் இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் சில இடங்களில் சமீபத்தில் இலங்கைக்கு ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று அந்த நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம் வளமான, வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற உக்ரைனும், ரஷ்யாவும் மோதிக் கொண்டிருக்கின்றன. போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அந்த இரு நாடுகளின் பொருளாதாரம் மட்டுமல்ல. உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுக்கும் இடையே நடைபெறும் மோதலில் உலக நாடுகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

இது போதாதென்று தற்போது தைவானை முன்னிறுத்தி அமெரிக்கா நடத்தும் செயல்பாடுகள் சீனாவுக்கு அச்சுறுத்தலை கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து சீனாவும் போர்க்குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் பொருளாதார சிக்கல்கள், போர் போன்ற சூழல்கள் ஏற்படும் போது உலக அளவில் பொருளாதாரம் மிகவும் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

மற்ற நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்தியா இன்றளவும் ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருந்து வருகிறது. அதே போல 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாடாக இருக்கிறது. பொருளாதாரம் மேம்படுகிறதோ  இல்லையோ, இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் உணவு அளிப்பதும், அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதும் இந்திய அரசின் கடமையாகிறது. அதற்கு தேவையான பொருளாதார பலத்துடன் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் இது குறித்த விவாதங்கள் ஜனநாயக நாட்டில் அவசியம் தேவைப்படுகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்திய பாராளுமன்றத்தில் பல நேரங்களில் சாதாரண மக்களை பாதிக்கக்கூடிய சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து அங்கே கேள்விகளும், விவாதங்களும் எழுப்பப்படுவதில்லை. மிக முக்கியமான, மதிப்பு வாய்ந்த பாராளுமன்ற நேரம் என்பது வேறு பிரச்சினைகளுக்கு செலவிடப்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து ஒரு விவாதம் நடைபெற்று இருப்பது வரவேற்கத்தக்கது. ஜி.எஸ்.டி போன்ற சட்டங்களின் பயன்பாடு பற்றிய விமர்சனங்கள் எழுவது வரவேற்புக்குரியது. மத்திய அரசின் மீது குற்றமா, மாநில அரசு இன்னும் செயல்பட வேண்டுமா என்பது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்று அரசியல் நோக்கர்கள் நம்புகிறார்கள்.

அந்நியச் செலாவணி என்ற ஒன்று இல்லாத காரணத்தால் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு அந்த நாடே முடங்கிப் போயிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு இவ்வளவு அன்னியச் செலாவணி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு மாற்று திட்டங்களை யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

எனவே, இது குறித்த விவாதங்களை பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப் முன்வர வேண்டும். ஏனென்றால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உயர்வு என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஏறும் பொழுது போக்குவரத்துக்கு பயன்படுகின்ற, போக்குவரத்தினால் பயன் பெறுகின்ற அனைத்து பொருட்கள், விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏறுகிறது. அதனை சமாளிக்க வேண்டிய பொறுப்பு தொழில் முனைவோர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் கடைசியாக அரசாங்கத்திற்கும் விழுகிறது. அரசாங்கம் என்பது மக்கள். எனவே மக்களின் தோள்களில் தான் இந்த சுமை விழுகிறது.

எனவே எவ்வாறு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது என்ற வாதங்கள் கண்டிப்பாக தேவைப்படுகின்றன. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்திய மக்கள் மெல்ல அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்ற நேரம். இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பது கண்டிப்பாக ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒரு சுமையாக மாறும்.

சாதாரணமாகச் சொன்னால் ஒரு தேனீர் என்பது 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் ஆகும் பொழுது மாதத்துக்கான உயரும் தொகை 150 ரூபாய் என்பது ஒரு உயர்வு. அதைப் போலவே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உயரும் போதும், அது வெறும் பெட்ரோல் கட்டண உயர்வு மட்டுமல்ல, போக்குவரத்து கட்டண உயர்வாகவும், பேருந்து கட்டண உயர்வாகவும், ரயில் கட்டண உயர்வாகவும், விமான கட்டண உயர்வு ஆகவும் மாறுகிறது.

அந்த சுமை மக்களின் தோள்களில் ஏறுகிறது. எனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் அதிக அளவில் இந்திய பாராளுமன்றத்தில் தேவை. அந்த திசையை நோக்கி நாடு செல்ல வேண்டியதும் அவசியம் ஆகும்.