கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர்களுக்கு துவக்க விழா

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர்களுக்கு 2022 2023 ஆம் கல்வியாண்டின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், போதைபொருட்களின் பக்கவிளைவுகளையும், சமுதாயத்தில் மாணவர்களின் முக்கியப் பொறுப்புகளையும், அவர்களின் கடமைகளையும், பாதுகாப்பும், பங்களிப்பும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக்கூறினார். மாணவர்களுக்கு காவல்துறையானது எப்போதும் தம் கடமையையும் பாதுகாப்பையும் நல்கும் என உறுதியளித்தார்.

முன்னதாக, சிறப்பு கெளரவ விருந்தினராக கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முன்னாள் மாணவியும், மதுரை தியாகராசர் கல்லூரியில் தாவரவியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருபவருமான அருணா ராமச்சந்திரன் பேசுகையில், மாணவிகள் மொழி திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், தாம் கல்லூரியில் டித்தபோது நிகழ்ந்த அனுபவங்களையும், தமக்கு வழிக்காட்டியாக இருந்த பேராசியர்கள் பற்றியும் நினைவூட்டி பேசினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி செயலர் யசோதாதேவி மாணவியர்களுக்கு கல்லூரி நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், கல்வியின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

கல்லூரி முதல்வர் நிர்மலா மாணவியர்களுக்கு கல்லூரி சார்ந்த சாதனைகள் மற்றும் தேசிய அளவில் கல்லூரி சிறப்புடன் செயல்பட்டு வருவதை மாணவியர்களுடன் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.