ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைப்பு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சித்ரா அனைவரையும் வரவேற்று கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவியரை வாழ்த்திப் பேசினார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தலைமை தாங்கிப் பேசுகையில், மாணவிகள் அறிவோடு திறமையையும் வளர்த்துக் கொள்ளும்போது, வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகவும், தலைமைப் பண்பு கொண்டவர்களாகவும் மேம்பட முடியும். அதற்கான ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சிக்காலமே உங்களின் கல்லூரிப்பருவம் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு “வாழ்க்கை ஒரு வாய்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றுகையில்: கல்லூரி வாழ்க்கை என்பது கொண்டாடித் தீர்க்க வேண்டிய காலமல்ல; சமூகப் பொறுப்பை ஏற்கத் தேவையான தகுதிகளை உங்களுக்குள் விதைக்க வேண்டிய காலகட்டம்.

எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வந்து உங்களின் உதவி தேவைப்படும் சக மனிதர்களுக்கு உதவும் பண்பையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் பெண்கள் மரியாதைக்குரிய போராளிகள் என்பதை மனதில் வைத்து கம்பீரமாக வாழுங்கள் என்று மாணவியருக்கு ஊக்கமளித்துப் பேசினார்.

பின்னர், கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பில் பார்வையாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.