தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அவர்களது பணி நேரத்தை நீட்டிப்பு செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

 

அதைக்குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில்  ஆரம்ப சுகாதார  நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான  பணி நேரம் பல வருடங்களாக  காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை என குறிப்பிடப்பட்டிருந்தது . தற்போது, பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள் மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரத்தை நீட்டித்து காலை 8 மணி முதல் 4 மணி வரை அரசாணை 225 ஐ, ஜூலை 25 ந் தேதி அன்று வெளியிட்டது.

தமிழகத்தில் 11 லட்சத்திற்கு மேலாக உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாரத்திற்கு 42 மணி நேரம் பணி செய்து வந்த நிலையில் அதை 48 மணி நேரமாக மாற்றம் செய்தனர்.

மருத்துவர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு 2009ல் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கோரிக்கையின் படி அப்போதைய டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு ஒரு சிறப்பு குழுவை நியமித்தது. அதில் 9 மணி முதல் 4 மணி வரை பணி நேரம் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போதைய பொது சுகாதாரத் துறை இயக்குனர் அவர்கள் தன்னிச்சையாக மருத்துவர்களுக்கு பணி நேரத்தை உயர்த்தியிருப்பது வருத்தத்துக்குரியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே பல்வேறு பணிகளுக்கு மத்தியில் கடும் மன அழுத்தத்தில் பணி புரியும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணி நேரத்தை அதிகரிப்பது மருத்துவர்களிடையே அதிருப்தியையும், கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தவிர பணியாளர்கள் (Para Medical staffs) அனைவருக்கும் பணி நேரம் 9 – 4 என்று திருத்தி அமைக்கப்பட வேண்டும். இதன்படி செவிலியர் மற்றும் அனைத்து பணியாளர் வாரத்திற்கு 40 முதல் 42 மணி நேரம் பணி என்ற நிலையில் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான பணி நேரம் (Uniform Duty time) அடைய வேண்டும் என்று தெரிவித்தனர்.

டாக்டர் கலைஞர் அரசு வெளியிட்ட அரசாணை 339 ஐ மாற்றக் கூடாது. மாறாக மருத்துவர் விரோத ஆணை 225 யை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.