தேங்கி நிற்கும் காய்கறிகள்

கேரளா மாநிலத்தில் கடும் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கோவையில் உள்ள மொத்த விற்பனை மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அனுப்ப முடியாமல் மூட்டை,மூட்டையாக தேங்கி நிற்கிறது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 750 டன் காய்கறிகள் சென்று வரும் நிலையில், அங்கு நிலவும் கனமழை வெள்ளத்தால் போக்குவரத்து மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு தினசரி 400 டன் வீதம் கடந்த ஐந்து நாளாக கோவை, மேட்டுப்பாளையத்தில் ஆறு கோடி ரூபாய் அளவிற்கான காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது. கோவையில் உள்ள எம் ஜி ஆர் காய்கறி மொத்த மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில், இருந்து வழக்கமாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள் தற்போது கொண்டு செல்ல முடியாமல் தேங்கி உள்ளதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். வரும் இரண்டு நாட்களுக்கு கேரளாவில் பாதிப்பு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மேலும் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அழுகும் தன்மையுள்ள தக்காளி, வெங்காயம் ஆகியவை அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோவையில் காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது.